Last Updated : 26 Dec, 2018 10:51 AM

 

Published : 26 Dec 2018 10:51 AM
Last Updated : 26 Dec 2018 10:51 AM

பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம் முடிவு

ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணைப்பு கடல் பகுதிகளில் 2.3 கி.மீ. தொலைவுக்கு பாம்பன் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் மொத்தம் 146 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பாலத்தை 144 கர்டர்கள் தாங்கி நிற்கின்றன. பாலத்தின் மத்தியில் பாக். ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு படகுகள், கப்பல்கள் செல்ல வசதியாக தூக்குப் பாலம் உள்ளது.

தூக்குப் பாலத்தின் இணைப்புக் கம்பிகளில் சுமார் 20 அடி நீளத் துக்கு டிச.4-ல் விரிசல் ஏற்பட்டது. இது சரி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில் தண்டவாளங்களுக்கு துருப்பிடிக்காமல் இருக்க பெயிண்ட் அடிக்கும் பணியும், தூக்குப் பாலத்தில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளும் டிச. 10 முதல் நடைபெற்று வருகின்றன.

பாலத்தின் உறுதித் தன்மையை நவீன தொழில்நுட்பக் கருவி மூலம் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே மீண்டும் பாம்பன் பாலத்தில் ரயில்களை இயக்க முடியும். எனவே மறுஅறிவிப்பு வரும் வரை ராமேசு வரத்துக்குப் பதிலாக அனைத்து ரயில்களும் மண்டபத்தில் இருந்தே இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடந்த 21 நாட்களாக ராமேசுவரத்துக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பழைய பாலம் கட்டப்பட்டு 104 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் பாம்பன் பாலத்துக்குப் பதிலாக சுமார் ரூ.250 கோடி செலவில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பாலம் தற்போதைய பாலத்துக்கு அருகே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் கட்டப்படும். இரட்டை ரயில் பாதையைக் கொண்ட புதிய பாலத்தின் நடுவில் 63 மீட்டர் நீளத்துக்கு தூக்கு பாலமும் இடம்பெறும்.

மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும். இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இந்த புதிய பாலம் கட்டும் பணி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x