Published : 17 Dec 2018 09:45 AM
Last Updated : 17 Dec 2018 09:45 AM

சென்னையில் பிரபல ரவுடி குங்பூ குமாரின் பிறந்தநாள் விருந்தில் ஒன்றுதிரண்ட ரவுடிகள்: பட்டாக் கத்திகளுடன் வந்த 4 பேர் கைது

சென்னையில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் கொண்டாட்ட விருந்தில், நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது. அதில் பங்கேற்று விட்டு திரும்பிய ரவுடிகளிடம் இருந்து 8 பட்டாக் கத்திகள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்தவர் ரஞ்சித் (31). குடிசை மாற்று வாரி யத்தில் பணியாற்றுகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பிரைட்டன் சாலை - அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பில் சென்றபோது, காரில் வந்த 4 பேர் கும்பல் கத்திமுனையில் இவரிடம் இருந்து பணம், செல்போனை பறித்துச் சென்றது. ரஞ்சித் கொடுத்த புகாரின்பேரில், புளியந்தோப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் போலீஸார் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், இவர்கள்தான் கைச்செலவுக்காக ரஞ்சித்திடம் வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரியவந்தது. விசாரணையில் தெரியவந்த தகவல்கள் குறித்து போலீஸார் மேலும் கூறியதாவது:

பிரபல தாதாவின் கூட்டாளி

பிடிபட்ட மாதவரம் சரவணன் (28), கொளத்தூர் சிவா (25), புளியந்தோப்பு கோபால் (34), ரமேஷ் (47) ஆகிய 4 பேரும் ரவுடிகள். இதில் மாதவரம் சரவணன் என்பவர், வடசென்னையை கலக்கிவந்த பிரபல தாதா சின்னா என்ற கேசவலுவின் கூட்டாளி. ஆந்திராவில் சட்டம் படித்தவர். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கே.கே.நகர் கதிரவன். அவர் கொலை செய்யப்பட்டது உட்பட 6 வழக்குகள் சரவணன் மீது உள்ளன.

இவர்கள் 4 பேரும் வில்லிவாக்கம் அடுத்த ராஜமங்கலத்தை சேர்ந்த பிரபல ரவுடி குங்பூ குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட விருந்தில் கலந்துகொண்டு திரும்பும்போது பிடிபட்டுள்ளனர்.

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை கொல்வதற்காக இவர்கள் கத்திகளை தயார் செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 பட்டாக் கத்திகள், 2 கார்கள், செல்போன்கள் கைப்பற்றப் பட்டன.

இவர்களைப் போல, சென்னை யின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகளும் அந்த பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதில் கலந்துகொண்ட மொத்த ரவுடிகளின் பட்டியலையும் சேகரித்து வருகிறோம். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

கடந்த பிப்ரவரியில் மாங்காடு அருகே நடந்த ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 80-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x