Published : 18 Dec 2018 06:29 PM
Last Updated : 18 Dec 2018 06:29 PM

பேனர்களை அகற்ற தயக்கமா?- ராஜினாமா செய்துவிட்டு அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிடுங்கள்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து பணியற்றலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது.

விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும், தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி வித்தியாசமின்றி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் விசாரித்து வருகின்றனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வரவேற்று காந்தியை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை முழுவதும் பேனர்கள் வைத்தவர்கள் மீது, வடபழனியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்காக பேனர் வைக்கப்பட்டது அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூடுதல்  மனுக்களை தாக்கல் செய்தார்.

அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் விதிமீறல் பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,  அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

அதேசமயம் சில இடங்களில் பேனர் வைத்தவர்களே தானாக முன்வந்து  விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், விதிமீறல் பேனர்களை தடுக்க வேண்டும் என்று பல உத்தரவுகளை போட்டாலும், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என குற்றம்சாட்டினர்.

 விதிமீறல் பேனர்களை முறையாக அகற்றாதது தொடர்பாக கடந்த 5 வருடங்களாக அரசு தெரிவிக்கும் காரணங்களைக் கேட்டு சோர்வடைந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு பொருளை திருடியவர் பொருளை திருப்பிக் கொடுத்து விட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டீர்களா? என கேள்வி எழுப்பியதுடன், அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் கட்சி பாகுபாடில்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே என கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும், பேனர் வைக்கும் எந்த அரசியல் கட்சியினர் மீதுதான் மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும், ஒவ்வொரு பேனரிலும் யார் விண்ணப்பிக்கிறார்கள், யார் பிரிண்ட் செய்கிறார்கள், எந்த தேதியில் அனுமதி வழங்கப்பட்டது என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா என கேள்வி எழுப்பினர்.

விதிமீறல் டிஜிட்டல் பேனர்களை அகற்றினால் அவற்றை சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் அகற்ற வேண்டும். அதற்கும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். விதிமீறல் பேனர்கள் குறித்த விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x