Published : 13 Dec 2018 09:52 AM
Last Updated : 13 Dec 2018 09:52 AM

பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய  திருவானைக்காவல் கோயில் கும்பாபிஷேகம்:  தமிழக ஆளுநர், மடாதிபதிகள் பங்கேற்பு

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனாய ஜம்புகேஸ்வரர் கோயிலில் மூலவர் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பஞ்சபூதத் தலங்களில் நீருக் குரிய தலமாகப் போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண் டேஸ்வரி உடனாய ஜம்புகேஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நடை பெற்று, முதல்கட்டமாக பரிவார மூர்த்திகளுக்கு கடந்த டிச.9-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக நேற்று காலை ஜம்புகேஸ்வரர் மூலஸ்தான விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலஸ்தான விமானக் கலசத்தில் காஞ்சி காமகோடி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அனைத்து ராஜகோபுரங்களிலும் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாள் மூலவர் விமானங்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் காஞ்சி காமகோடி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றனர்.

மேலும், தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவ சுவாமிகள், காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதீனகர்த்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, அறநிலையத் துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன், மண்டல இணை ஆணையர் கல்யாணி மற்றும் உபயதாரர்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவையொட்டி மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அனுமதி அட்டை வழங்கப்பட்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக் கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று கோபுரங்களைத் தரிசித்துவிட்டு, கும்பாபிஷேகம் முடிந்தவுடன் கோயில் உள்ளே சென்று வழிபட்டனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் கோயிலின் பல்வேறு பகுதிகளில் சிறு மோட்டார் பொருத்தி, அதில் ஸ்பிரிங்ளர் அமைத்து, கும்பாபிஷேக தீர்த் தத்தை பக்தர்கள் மீது தெளித்தனர்.

திருக்கயிலாய இசைக்கருவிகள்

ஏராளமான சிவனடியார்கள் கொம்புத்தாரை, சங்கு, நகரா, உடுக்கை, பிரம்மதாளம் உள்ளிட்ட பல்வேறு திருக்கயிலாய இசைக்கருவிகளை இசைத்து பரவசப்படுத்தினர்.

இருளில் பக்தர்கள்…

புனித நீர் கலசங்களை அதிகாலை 5.30 மணி முதலே ராஜகோபுரங்களுக்கும், மூலஸ் தான விமானங்களுக்கும் சிவாச் சாரியார்கள் கொண்டு செல்லத் தொடங்கினர்.

ஆளுநர், காஞ்சி மடத்தின் பீடாதிபதி மற்றும் அமைச்சர்கள், சிறப்பு விருந் தினர்கள், கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதிகளின் மேல் மண்ட பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. இந்த இடத்துக்கு அதிகாலை 4.30 மணி முதலே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த இரு மண்டபங்களிலும் மின்விளக்குகள் எதுவும் பொருத் தப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். அதிகாலை 5.15 மணிக்கு சன்னதியின் மேல் மண்டபத்துக்கு வந்துவிட்ட காஞ்சி காமகோடி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இருளிலேயே அமர்ந்திருந்தார்.

ஆளுநர் இந்த மண்டபத்துக்கு வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு மின் விளக்கு பொருத்தப்பட்டு, எரியவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ஜெயப்பிரியா மற்றும் உபயதாரர்கள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x