Last Updated : 29 Dec, 2018 07:36 AM

 

Published : 29 Dec 2018 07:36 AM
Last Updated : 29 Dec 2018 07:36 AM

ராஜபாளையம் - செங்கோட்டை இடையே நெல் வயல்களை அழித்து நான்குவழிச் சாலை திட்டம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு; மாற்று வழியில் அமைக்க வலியுறுத்தல்

ராஜபாளையம் - செங்கோட்டை இடையே நெல் வயல்களை அழித்து நான்கு வழிச்சாலை அமைப்பதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று, விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை முதல் மதுரை மாவட்டம் திருமங்கலம் வரை 147 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 818 ஏக்கர் அளவுக்கு நெல் விளையும் நன்செய் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

முதல்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நெல் நடவு செய்துள்ள வயல்களில் கடந்த சில வாரங்களுக்குமுன் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன. இது,விவசாயிகள் மத்தியில் கடும்கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக,திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

அவசியம் என்ன?தற்போது சாலை அமைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையால் புதிதாக அறிவிக்கப்பட்ட என்.எச்.

744 நான்கு வழிச் சாலையின் வரைபடத்தை பார்த்தால் அதிகளவு வளைவு, நெளிவுகளோடு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது தெரிகிறது. விருதுநகர் மாவட்டம் புத்தூர் விலக்கிலிருந்து பாம்புகோவில் சந்தை வரையிலான 22 கி.மீ. தூரத்துக்கு, எந்தவொரு நீர் மற்றும் வன ஆக்கிரமிப்பும் இல்லாமல் நேராக சாலை அமைப்பதற்கு பதிலாக 32 கி.மீ. தூரம் நீர்ப்பிடிப்பு மற்றும் நன்செய் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வளைவு, நெளிவுகளோடு சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகி்ன்றனர்.

மாற்று வழித்தடம்திருநெல்வேலி வன உயிரினபாதுகாப்பு சரணாலய பகுதியிலிருந்து 5 கி.மீ.க்கு அருகில் சாலை அமைப்பது வனஉயிரினங்களுக்கு ஆபத்தாக அமையும் எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு விளைநிலங்களையும், வனப்பகுதியையும் பெருமளவுக்கு அழித்து வளைவு, நெளிவாக சாலை அமைப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். மாற்று வழித்தடத்தில் சாலைஅமைக்கலாம் என்ற யோசனையையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையை கேட்டு முடிவு செய்யப்படும் என்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் தெரிவித்திருக்கிறார். ஆட்சியரின் முடிவுக்காக விவசாயிகள் தற்போது காத்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x