Published : 07 Dec 2018 10:26 AM
Last Updated : 07 Dec 2018 10:26 AM

‘இந்தியாவில் 35% பெண்களுக்கு உடல் பருமனால் பாதிப்பு’

இந்தியாவில் 35 சதவீத பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக உடல் பருமன் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பிரவீன்ராஜ் கூறினார்.

உடல் பருமன் பாதிப்புகள் தொடர்பான கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டாக்டர் பிரவீன்ராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 35 சதவீத பெண்கள், 25 சதவீத ஆண்கள், 19 சதவீத குழந்தைகள் உடல்பருமன் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல்பருமன் பாதிப்பு ஏற்படுகிறது.

இதில் எந்தக் காரணங்களுக்காக உடல்பருமான் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக அணுகி, அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் அவ்வாறு அணுகாமல், மாற்று வழியில் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர்.

இதில் சில நன்மைகள் இருந்தாலும், தொடர்ச்சியாக பல கட்டுப்பாடுகளைப் பின்பற்ற இயலாது. கட்டுப்பாட்டை தளர்த்திய உடனே மீண்டும் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

தற்போதுள்ள கொழுப்பு நிறைந்த துரித உணவு, சிற்றுண்டி வகைகளை உட்கொள்வதால் மட்டுமே உடல்பருமன் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் மனஅழுத்தம், உறக்கமின்மை பிரச்சினை காரணமாக வளர்சிதை மாற்றத்தால்தான் உடல்பருமன் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது பள்ளி சிறுவர்கள் உடல்பருமனால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலானோருக்கு ஏற்படும் மனஅழுத்தமே உடல் பருமனுக்கு காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, டாக்டர்களின் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப உடற்பயிற்சி, உணவுப் பழக்கத்தில் மாற்றம், மனநல ஆலோசனை போன்றவை பெற்று, உடல் எடையை குறைக்க வேண்டும். எனினும், முற்றிலும் வளர்சிதை பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சைதான் தீர்வு. உடல்பருமன் பாதிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x