Published : 14 Dec 2018 07:29 AM
Last Updated : 14 Dec 2018 07:29 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்: ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பியது

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணை யம் தற்போது இறுதிக்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதலில் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். மேலும், “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே சுமார் 50 நாட்கள் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவரும் அவர்தான். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அவரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும்” என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 20-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா, சிகிச்சையில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருந்ததா என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்விகள் கேட்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 18-ம் தேதியும், செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்றும் (14-ம் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங் கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சுகாதாரத் துறையிடம் ஆலோசனை நடத்தப்பட்டதா, லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் இவர்களிடம் கேள்விகள் கேட்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பொன்னையன் 18-ம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆர் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொன்னையன் பேசும்போது, “ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பத்தினர் எட்டு மாதமாக ஸ்லோ பாய்சன் கொடுத்து வந்துள்ளனர். இதனால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார்’ என்று கூறி யிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் கேட்டு பொன்னையனுக்கு சம்மன் அனுப்பப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

17-ம் தேதி அப்போலோ இதயவியல் நிபுணர் விஜயசந்திர ரெட்டி, 19-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர் நிக்கில் டான்டன், 20-ம் தேதி ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி யாக இருந்த பெருமாள்சாமி ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இறுதியாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x