Published : 04 Dec 2018 09:59 AM
Last Updated : 04 Dec 2018 09:59 AM

மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும்: பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் கோரிக்கை

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என்று பேரவைத் தலைவர், முதல்வரிடம் காங்கிரஸ் எம்எல் ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராம சாமி தலைமையில் கொறடா விஜயதரணி, எச்.வசந்தகுமார், பிரின்ஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்தனர்.

பேரவைத் தலைவர் பி.தனபால், முதல்வர் கே.பழனிசாமி ஆகி யோரை தனித்தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கே.ஆர்.ராமசாமி கூறியதாவது:

‘கஜா’ புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு இழப்பீடு வழங்குவதை அரசு தாமதப்படுத்தி வருகிறது. இழப்பீடுகளுக்காக ஒதுக்கியுள்ள தொகை மிகவும் குறைவாக உள்ளது. அதை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் முதல்வரிடம் கேட்டுள்ளோம்.

அதேபோல், மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு முன் அனுமதி வழங்கியுள்ளது. அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் ஒரு பகுதி மிக மோசமான நிலையை சந்திக்கும். இதைத் தடுக்க தமிழக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி விவா திக்க வேண்டும் என்று கோரியுள் ளோம். நடவடிக்கை எடுப்பதாக பேரவைத் தலைவர் கூறியுள்ளார். கூடிய விரைவில் சட்டப்பேர வையை கூட்ட உரிய ஏற்பாடு களை செய்வதாக முதல்வரும் கூறியுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்துவீர்களா’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கே.ஆர். ராமசாமி, ‘‘இது நமது ஜீவாதார உரிமை. இந்த தண்ணீர் வந்தால் தான் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியும். தமிழக மக்களை காப்பாற்ற என்ன வகையில் முடியுமோ அந்த வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க உதவியாக இருப்போம். இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல் வரிடம் கூறியுள்ளோம். அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் சார்பில் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x