Published : 23 Dec 2018 07:58 AM
Last Updated : 23 Dec 2018 07:58 AM

இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்: ‘தமிழாற்றுப்படை’ நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப் பில் சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார்.

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப் பில் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 20-வது ஆளு மையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமை தாங் கினார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் வைரமுத்து பேசியதாவது:

இயற்கை என்ற பெரும் பொருளை மனித வாழ்க்கை என்ற அரும்பொருளோடு ஈராயிர மாண்டுகளுக்கு முன்பே இணைத் தவர் என்று கபிலரைக் கருதலாம். இயற்கை என்பது மனிதனுக்குத் துணைப்பொருளன்று, முதற் பொருள் என்ற இலக்கணத்துக்கு இலக்கியம் படைத்தவர் கபிலர்.

இன்று உலகம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் என்ற கருதுகோள். ஒரு நாட்டின் மொத்தப் பரப்பில் 33 சதவீதம் காடு வேண்டும் என்று கதறுகிறது ஐ.நா. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் 160கோடியில் இருந்து 650 கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள்தொகை. ஆனால், அதே காலவெளியில் உலகம் தன் சதுப்புநிலக் காடுகளில் பாதியை இழந்திருக்கிறது. மனிதா இயற் கையை விட்டு எட்டிச் செல்லாதே என்று எச்சரிக்கிறது கபிலர் பாட்டு.

ஓசோன் கூரை கிழியும் ஓசை

இயற்கைக்கு எதிரான மனித னின் யுத்தம்தான் உலகத்தை வெப்ப மயமாக்கி ஓசோன் கூரையைக் கிழித்திருக்கிறது. புவி வெப்பத்தால் ஒருமணி நேரத்துக்கு ஒரு உயிரினம் அழிந்துகொண்டிருக்கிறது. இன்னும் 3 டிகிரி வெப்பம் கூடினால் உலகில் 33 விழுக்காட்டு உயிரினம் அழிந்துபோகும் என்கிறார்கள் ஆய் வாளர்கள். இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும். விண்ணும் மண்ணும் தங்கள் சம நிலையை இழந்துவிடும்; பருவங் கள் மாறிப்போகும்; துருவங்கள் உருகிப்போகும். காடுகள் அழிந் தால் மலைவளம் குன்றும்; மலை வளம் அழிந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் அழிந்தால் நிலவளம் குன்றும்; நிலவளம் அழிந்தால் விளைநிலம் குன்றும். பிறகு வேளாண்மை என்ற நாகரிகத்தை விளைநிலங்களில் புதைக்க வேண்டியிருக்கும்.

விலங்குகளையும் பறவைகளை யும் தாவரக் கூட்டங்களையும் மனித வாழ்வோடு கட்டுவிக்கும் ஊடுசரடாகக் கபிலர் இலக்கியம் விளங்குகிறது.

பாறைகளின் இடுக்கில் தேன்கூடு

கபிலர் பாட்டுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் இடம்பெற்ற ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ என்ற தொடர் கபிலரிடம் நான் கடன்பெற்றது. கபிலரை இணையதள உலகத்தோடு இணைக்கும் முயற்சிதான் அது.

தமிழர்கள் மத்தியில் பக்தி இலக்கியம் பரவிய அளவுக்குச் சங்க இலக்கியம் பரவவில்லை. பக்தி இலக்கியம் மறுமையோடு தொடர்புடையது; சங்க இலக்கியம் இம்மையோடு தொடர்புடையது. சங்க இலக்கியம் கடினச் சொற்களால் ஆனது என்று கழித்துவிட வேண்டாம். பாறைகளின் இடுக்கில் தேன்கூடு தெரிவதுபோல, கெட்டிப்பட்ட சொற்களுக்கு மத்தியில்தான் கொட்டிக்கிடக்கிறது தமிழர் பண்பாடு.

இளைஞர்களே! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்வின் முகவரி தேடி நகருங்கள். நல்லன கொள்ளுங்கள்; அல்லன தள்ளுங்கள். பாரியின் மரணத்துக்குப் பிறகும் பாரிமகளிரை ஆதரித்தவர் கபிலர். ஒரு தோழனின் வாழ்வோடும் தாழ்வோடும் உடனிருப்பதே உயர்ந்த அறம் என்பதைக் கபிலரின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு வைரமுத்துபேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x