Last Updated : 21 Dec, 2018 11:21 AM

 

Published : 21 Dec 2018 11:21 AM
Last Updated : 21 Dec 2018 11:21 AM

கஜா புயல்: விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத அரசு; தனது வாடிக்கையாளர்களின் 8 ஆண்டுகள் கடனை தள்ளுபடி செய்த டீ கடைக்காரர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது டீக்கடையில் வாடிக்கையாளர்களான விவசாயிகள் டீ குடித்து, வடை சாப்பிட்ட வகையில் 8 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வம்பன் நான்கு சாலை பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவர், 'கஜா' புயலின் கோர தாண்டத்தில் நிலை குலைந்து நின்ற மக்களுக்கு இலவசமாக டீ விநியோகித்துள்ளார். புயல் பாதிப்புகளால் விவசாயத்தை இழந்ததோடு கூலி வேலைகூட கிடைக்காமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிவாரண தொகையை இதுவரை வழங்கவில்லை. மேலும், மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் பிரதான கோரிக்கையான கடன் தள்ளுபடியையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. தங்களது வறுமையைப் பற்றி அனுதினமும் தனது டீக்கடையில் புலம்பியதைத் தொடர்ந்து தன்னால் இயன்ற உதவியை இவர்களுக்கு செய்ய வேண்டுமென கருதிய சிவக்குமார், டிசம்பர் 18-ம் தேதி வரை கடந்த 8 ஆண்டுகள் டீ குடித்த, வடை சாப்பிட்ட வகையில் ஏற்பட்ட கடன்களை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி செய்தார்.

இதற்கான அறிவிப்பு பதாகையையும் கடை வாசலில் தொங்கவிட்டுள்ளார். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் சந்தோஷத்தையும் வெகு ஜன மக்களிடம் வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும்கூட ஏழை, எளிய மக்களைப் பற்றி ஒரு சாதாரண மனிதரால் உணர்ந்ததைக்கூட அரசாங்கம் உணரவில்லையே என்பதுதான் பரபரப்பான பேச்சாக உள்ளது.

இது குறித்து சிவக்குமார் கூறியது: "இப்பகுதியானது மலர், காய்கறி போன்ற சிறு விவசாயத்தையும் தரிசு நிலங்களில் வானம் பார்த்த விவசாயமாக கடலை, எள் போன்ற பயிர்களை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயம், கட்டுமானப் பணி போன்ற அன்றாட கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். புயலுக்கு பிறகு இவர்களது வாழ்க்கையானது தடம் மாறியதால் பரிதவித்து வருகின்றனர். ஒரு வேளை டீ குடிப்பதற்குக்கூட யோசிக்க வேண்டிய நிலைக்கு அவரவர் வீடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இங்கு வந்து ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் புலம்புவதை காதுகொடுத்தே கேட்க முடியவில்லை. கண்ணீர் சிந்தாத நாளே இல்லை. விவசாயக் கடன், சுய உதவிக்குழுக் கடன் என ஒவ்வொருவரும் குறைந்த தொகையையே கடன் பெற்றிருந்தாலும்கூட அதை செலுத்த முடியவில்லை. இதை அரசு தள்ளுபடி செய்யும் என எதிர்பார்த்துவரும் நிலையில் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை. 

அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையைக் கூட அரசு கொடுக்கவில்லை. புயலுக்கு அடுத்த நாள் இலவசமாக டீ போட்டுக்கொடுத்தேன். மேலும், கடந்த 8 ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் பெற்றிருந்த கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்துள்ளேன். அது, ஒவ்வொருத்தருக்கும் சொற்ப ரூபாய்தான் என்றாலும்கூட அதுவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்னால் முடிந்ததை இம்மக்களுக்கு செய்துள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x