Published : 13 Dec 2018 03:34 PM
Last Updated : 13 Dec 2018 03:34 PM

பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த வாரம் நடந்த வழக்கில் சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோயில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் அமைத்தது.

கடந்த ஆகஸ்டு 1 அன்று சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் மற்றும் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு இறுதி வாதங்களுக்குப் பின் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ''சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசுத் தரப்பு பிறப்பித்த உத்தரவு  முற்றிலும் தவறானது. உள்நோக்கம் இல்லை என அரசுத் தரப்பு தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசாணை சட்டவிதிகளுக்குப் புறம்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ளதால் அரசாணை செல்லாது'' என்று தீர்ப்பளித்தது.

மேலும்,  சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து ஓய்வுபெற இருந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் பதவியை மேலும் ஓராண்டு நீட்டித்து அவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாகச் செயல்படுவார் என உத்தரவிட்டது. இதுவரை விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது என என்னென்ன பணிகளை இதுவரை செய்துவந்தாரோ அதே பணிகளை அவர் தொடர்வார் என உத்தரவிட்டது.

அவர் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்தால் போதும் என உத்தரவிட்டது. இதற்கு விமர்சனமும், வரவேற்பும் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும், சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் அசோக்பூஷன், நாகேஸ்வரராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தனது வாதாடினார்.

அவரது வாதத்தில் சிலைக் கடத்தல் வழக்கில் சர்வதேச அளவில் தொடர்பிருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். அது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. ஓய்வு பெற்ற அதிகாரியை, பதவியில் தொடருமாறு உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? உத்தரவை உயர் நீதிமன்றம் போட்டாலும் சம்பளத்தை தமிழக அரசுதான் தரப்போகிறது, வழக்கில் என்ன நிலை உள்ளது என்ன செய்யவேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிக்குத்தான் தெரியும். நீதிமன்றத்துக்கு அல்ல. ஆகவே சிறப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அரசாணை ரத்தையும் நீக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேபோன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மறுத்துவிட்டது. இது குறித்து வழக்கின் எதிர்மனுதாரர்கள் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x