Published : 27 Aug 2014 12:09 PM
Last Updated : 27 Aug 2014 12:09 PM

கவுரவிக்கப்படாத நாட்டுப்புறக் கலைஞர்கள்: 3 ஆண்டாக கிடப்பில் கிடக்கும் விருது விண்ணப்பங்கள்

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய விருதுகள் கடந்த 3 ஆண்டாக வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு சுற்றுலா துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலை, பண்பாட்டு மையம் உள்ளது.

நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் திட்டங்களை செயல்படுத்துவது, சுதந்திர தினம், குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள், வெளிநாட்டு பயணிகளுக்கான பொங்கல் விழா போன்றவற்றுக்கு கலைஞர்களை அழைத்துச் செல்வது போன்றவை இந்த மையத்தின் முக்கிய பணி.

3 ஆண்டாக விருதுகள் வழங்கவில்லை

இதுதவிர நாட்டுப்புற கலைஞர்களை கவுரவித்து, ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் 5 பேருக்கு விருதுகள் வழங்கும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 18 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை வளர்மணி, 50 வயதுக்கு உட் பட்டவர்களுக்கு கலை சுடர்மணி, 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதுகளும், தலா ரூ.2 ஆயிரம் பொற்கிழியும், ரூ.500 மதிப்பில் பொன்னாடையும் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 5 மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் ஒருவர் `தி இந்து உங்கள் குரல்’ பகுதியில் புகார் செய்தார்.

அவர் மேலும் கூறியதாவது: கிராமியக் கலைகளின் பிறப்பிடமான மதுரை மண்ட லத்தில் அந்தக் கலைகள் அழிந்துவருகின்றன.

ஆடல்பாடல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகரித்ததாலும், போலீஸாரின் கெடுபிடிகள் காரணமாகவும் பல விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதே இல்லை. பண்பாட்டு மையமும் கடந்த 3 ஆண்டாக செயல்படாமல் உள்ளது. இதனால், 2011 முதல் விருது வழங்கப்படவில்லை.

மாதத்தில் ஒன்றிரண்டு நாட்கள்தான் எங்களுக்கு நிகழ்ச் சிகள் வரும். அந்த வருமா னத்தில் தலா ரூ.500 வரை செலவழித்து விருதுக்கு விண்ணப் பித்தோம். எங்கள் ஆசான்களிடம் பரிந்துரை கடிதத்தையும் பெற்றுக் கொடுத்தோம். இப்போது அவர்களில் பலர் இறந்து விட்டார்கள்.

இதுபற்றி கலை பண்பாட்டு அலுவலத்தில் கேட்டால், மண் டல உதவி இயக்குநர் பதவி நீண்டகாலமாக காலியாக இருப்பதாக கூறுகிறார்கள். ஆட்சி யர்களும் கண்டுகொள்வ தில்லை என்றார்.

இந்த புகார் பற்றி திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய 4 மண்டலங்களின் உதவி இயக்குநராக பொறுப்பு வகிக்கும் பெ.குணசேகரனிடம் கேட்டபோது அவர் கூறியது: 20 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் நான் உதவி இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளேன். இருப்பினும் துரிதமாக விண்ணப் பங்களைப் பெற்று, ஆட்சியர்களின் உதவியுடன் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பெரம்பலூர் கலைஞர்களுக்கு விருது வழங்கியுள்ளோம். இன்னும் 6 மாதத்துக்குள் மற்ற மாவட்டங்களிலும் விருது வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x