Published : 30 Nov 2018 09:54 AM
Last Updated : 30 Nov 2018 09:54 AM

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் - 7 ஏ செயற்கைக் கோள் விரைவில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக் கோள் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் நேற்று வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:

ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 செயற்கைக் கோள் கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் இருந்து 15 நாட்களில், பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட்டை இஸ்ரோ குழு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளி துறையில் நமது வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் 'ஹைசிஸ்' செயற்கைக் கோள் அதிநவீனமானது. அதன் உதிரிபாகங்கள் அகமதாபாத், சண்டீகரில் உருவாக்கப்பட்டன. அத்துடன் சேர்த்து வர்த்தக ரீதியில் 30 வெளிநாட்டு செயற் கைக் கோள்களையும் நிர்ணயிக்கப்பட்ட புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள் ளோம்.

அடுத்ததாக, அதிக எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக் கோள் டிசம்பர் 5-ம் தேதி அதிகாலை 2.08 மணிக்கு பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்.

அடுத்த ஆண்டில் சந்திரயான்-2

அதைத் தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜிசாட்-7ஏ செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பரில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும். 'சந்திரயான்-2' விண்கலம் அடுத்த ஆண்டில் ஏவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் திட்ட இயக்குநர் ஆர்.குட்டன் கூறும்போது, "இலகு ரக பிஎஸ்எல்வி ராக்கெட்டையே தற்போது பயன்படுத்தியுள்ளோம். வெவ்வேறு செயற்கைக் கோள் களை வெவ்வேறு புவிவட்ட சுற் றுப்பாதையில் நிலைநிறுத்த முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம். இது இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த இன்னொரு இமாலய வெற்றி"என்றார்.

ஹைசிஸ் செயற்கைக் கோள் திட்ட இயக்குநர் கே.சுரேஷ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் உடன் இருந்தனர்.

பிஎஸ்எல்வி வரிசையில் 44 ராக்கெட்கள் ஏவப்பட்டிருந்தன. தற் போது ஏவப்பட்டிருப்பது 45-வது ராக்கெட். பிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் இதுவரை 44 இந்திய செயற்கைக் கோள்கள், வர்த்தக ரீதியில் 269 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x