Published : 10 Nov 2018 03:04 PM
Last Updated : 10 Nov 2018 03:04 PM

கோயில்களில் வழங்கப்படும் சுகாதாரமற்ற பிரசாதம்: கி.வீரமணி கண்டனம்

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம் சுகாதாரமற்றது எனவும், புனிதம் என்ற பெயரால் அவை கண்டுகொள்ளப்படவில்லை எனவும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த அக்டோபர் மாதம், மூத்த விஞ்ஞானிகள் குழு ஒன்று மைசூரைச் சார்ந்த மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனத்தின் சார்பில், நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் தரப்படும் பிரசாதம் எத்தகைய தன்மையது, எவ்வளவு சுகாதாரக் கேட்டுக்கான நச்சுப் பொருள்கள், நோய் பரப்பும் கிருமிகள் பரவ வாய்ப்பேற்படுத்தும் தன்மையது என்பது பற்றி 30 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அளித்துள்ளதோடு, அந்த புனிதப் பிரசாதங்கள் சுகாதாரக் கேடான வகையில் தயாரிக்கப்படுகிறது; தயாரிக்கப்படுவது மட்டுமல்ல; அவற்றை அறைகளில் வைத்துப் பாதுகாக்கும் முறைகளிலும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது என்ற தகவல்களை ஆராய்ச்சி செய்து கண்டறிந்து கொடுத்த பிறகும்கூட, அவற்றைத் தூய்மையுடன் தயாரிக்கவோ, பாதுகாக்கவோ எந்தவித முயற்சிகளும் சம்பந்தப்பட்ட கோயில் பிரசாதங்களை வழங்கும் அதிகாரிகள் அக்கறை காட்டவே இல்லை என்று தெரிவித்துள்ளது.

இத்தகவல் ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகியுள்ளது. லட்டுகள், காஜ்ஜய்யா, பாயாசம் முதலிய பிரசாதங்கள் இவற்றில் அடங்கும். இதைத் தயாரிக்கும் கோயில்களில் இந்த பிரசாதம் என்கிற, உட்கொள்ளப்படுகின்ற உணவுப் பண்டங்கள் சுகாதாரக் கேடின்றி, முறையாக பாதுகாக்கப்பட்டு பக்தர்களிடையே விநியோகிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்பதே இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த முடிவு ஆகும்.

‘புனிதம்’ என்ற புரட்டு!

இதே போன்று தனியார் உணவு விடுதிகளிலோ அல்லது உணவுப்பண்டங்கள் விற்கும் கடைகளிலோ நடந்தால் உடனே பாயும் சட்டம், ஏன் கோயில், பக்தி என்றால் கைகட்டி, வாய் மூடி, மவுனமாகி, நிற்க வேண்டும்? ஒரே காரணம் புனிதம் என்ற புரட்டுதானே.

பக்தி மனிதனை வாழ வைக்கப் பயன்படுகிறதா? ஆன்மிகம் என்று இல்லாத ஒன்றை கற்பனையாக வைத்து பொய் சொல்லும் பெரிய மனிதர்கள் - மதவாதிகள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள்? நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோயில்களில் எந்த ஒழுங்கும், கட்டுப்பாடும் இதுகுறித்து காட்டப்படுவதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் கே. வெங்கடேசமூர்த்தி என்பவர், நாங்கள் எப்படி பிரசாதம் சுகாதாரக் கேடின்றி தயாரிப்பது, பாதுகாப்பது, விநியோகம் செய்யும் முன் தர நிர்ணயம் செய்தல் என்பன குறித்து மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திற்கு நாங்கள் எடுத்துக் கூறியும் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில், நாட்டில் உள்ள முக்கிய கோயில் பிரசாதங்களின் தூய்மை, தரம் பற்றி நிர்ணயித்துக் கண்காணிக்கும் கடமை இந்த ஆணையத்தின் பணியாகும்.

உயிர் கொல்லும் தொற்று நோய்கள்!

அதுபற்றி காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை; விளைவு உயிர் கொல்லும் தொற்று நோய்கள்தான் - பக்தர்களுக்கு. பக்தி - புனிதத்தின் புரட்டு மனிதர்களை கொல்லுவதற்குப் பயன்படுகிறது. பக்தி என்றவுடன் எதையும் விழுங்கும் மூட மனிதர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவிடும் ஆபத்து இதன் மூலம் பெருகிடுவது பேரபாயம்.

இதை அமல்படுத்த அந்தத் துறை - கோயில் விவகாரம் ஆனபடியால் இதில் துணிந்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. புனிதம் என்றால் இப்படி மூட நம்பிக்கை பரப்புதலும், பாதுகாப்பதும் தானா? புனித கங்கை என்ற நதியின் தூய்மைக்கு மக்கள் வரிப் பணம் இதுவரை பல்லாயிரம் கோடி பாழ்படுத்தப்பட்டு வருகிறது.

புனித கங்கை?

பலன் ஏதும் உண்டா? சான்றாக புனித கங்கை நீர் என்று பாட்டில்களில் அடைத்து விற்றபோது உள்ளே குடிக்காதீர்; தலையில் தெளித்துக் கொள்வீர் என்று எச்சரிக்கை லேபிள் ஒட்டப்பட்டது, மகா கேவலம். கையில் பலரும் கறுப்பு, சிகப்பு - காவி என்று பல வண்ணங்களில் கயிறு கட்டிக் கொண்டிருப்போர் அந்த கயிறுகளில் எவ்வளவு நோய்க் கிருமிகள் இருந்து உணவு உண்ணும்போதுகூட உள்ளே சென்று நோய்களை உண்டாக்கும் அபாயம் பற்றி பலரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

காரணம் புனிதம். புனிதம் என்று முத்திரை குத்தி விட்டால், கேள்வி கேட்காதே, ஆராயாதே, நம்பு, கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள், சந்தேகப்படாதே என்ற மூடத்தனத்திற்குரிய கான்கிரீட் பூச்சு. இந்து மதத்தில் தானே இந்த பிரசாத வியாபாரம்? வேறு மதங்களில் இல்லை. நாம் சுட்டிக் காட்டினால் இந்து மதத்தைப்பற்றி மட்டும் பேசுகிறார்கள் என்று பழி தூற்றுவது நியாயமா?” என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x