Published : 05 Nov 2018 09:49 AM
Last Updated : 05 Nov 2018 09:49 AM

பண்டிகை கொண்டாடினாலும், கொண்டாடாவிட்டாலும் தீபாவளியன்றும் பரபரப்பாக இயங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்

தீபாவளி பண்டிகை கொண்டாட் டங்களில் ஈடுபடாத அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குகூட அன்றைய தினம் ஓய்வு கிடைப்பதில்லை என அவர்களின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கொண்டாடப் படும் பண்டிகைகளில் தீபாவளி முதல் இடத்தில் உள்ளது. மாற்று மதத்தினரும், இந்துக்களில் உள்ள நாத்திகர்களும்கூட புத்தாடை, இனிப்பு, பட்டாசு என குழந்தகளுக் காக ஏதோ ஒரு வகையில் தீபாவளி கொண்டாட்டங்களில் இணைந்து விடுகிறார்கள். தமிழகத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள். தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துகூட தெரிவிக்காதவர்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி நாளன்று என்ன செய்வார் கள் என்று அக்கட்சிகளின் தொண்டர்களிடம் விசாரித்தோம். தீபாவளியை கொண்டாடாத தலைவர்களுக்கு கூட அன்றைய தினம் ஓய்வு கிடைப்பதில்லை என்று தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுகவில் இருந்து பிரிந்த திராவிடக் கட்சியாக இருந்தாலும் எம்ஜிஆரும், ஜெயலலிதா உள் ளிட்ட அதிமுக தலைவர்களும் தங்களது கடவுள் நம்பிக்கையை வெளிப்படையாகவே பின் பற்றியவர்கள். ஜெயலலிதா தனது வீட்டில் தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடியவர். அவர்களின் வழியைப் பின்பற்றி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோரும் தீபாவளியை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது, ''முதல்வராக 2-வது ஆண்டு தீபாவளியை கொண்டாடும் முதல்வர் பழனிசாமி, அன்றைய தினம் பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் நேரத்தை செல விடுவார்.

பின்னர், அதிகாரிகள், அமைச்சர் கள், கட்சி நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரி விப்பார்கள். எனவே, அவருக்கு அன்றைய தினம் ஓய்வு என்பதே இருக்காது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர், உறவினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினாலும் கட்சியினரை சந்திக்க முக்கியத்துவம் கொடுப் பார்'' என்றனர்.

திமுக தலைவர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார்கள். இதுவரை திமுக தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து கூட தெரிவித்ததில்லை. இந்த ஆண்டு தீபாவளியன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன செய்வார் என அக்கட்சியினரிடம் கேட்டபோது, “தீபாவளி கொண் டாடாவிட்டாலும் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு திமுக எதிரானது அல்ல. கருணாநிதியைப் போல ஸ்டாலினும் தீபாவளி யன்று வழக்கம்போல பணிகளை மேற்கொள்வார்.

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவார். குடும்ப உறுப் பினர்களில் சிலர் தீபாவளி கொண்டாடுவார்கள். அவர்களின் சுதந்திரத்தில் அவர் தலையிட மாட்டார். அன்றைய தினம் பெரும்பாலும் பொதுநிகழ்ச்சிகள் இருக்காது. வீட்டுக்கு வரும் கட்சியினரை சந்திப்பார். சில நேரங்களில் பொதுமக்களும், மாற்று கட்சியினரும் இனிப்புகள், புத்தாடைகளை வழங்குவது உண்டு. அதனை ஏற்றுக் கொள்வார்'' என்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு தீபாவளி என்றாலே உற்சாகம்தான் என் கின்றனர் அவருடன் இருப்பவர் கள். அன்றைய தினம் அவருக்கு ஓய்வே இருக்காது. குடும்பத்தின ருடன் நேரம் செலவிட முடியாத அளவுக்கு கட்சியினர் வந்து கொண்டே இருப்பார்கள். அனை வரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொள்வார் என்றனர்.

மருத்துவ உதவி

தீபாவளி தினத்தன்று என்ன செய்வீர்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜ னிடம் கேட்டபோது, ''பாஜகவினர் அனைவரும் தீபாவளியை குடும் பத்துடன் உற்சாகமாக கொண்டாடு வார்கள். அதனால் நானும் அன்றைய தினத்தை குடும்பத் துடன் செலவிடுவேன். ஆனால், அன்பு மிகுதியால் தொண்டர்கள் வாழ்த்து சொல்ல வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை சந்திப் பதில் எனக்கும் மகிழ்ச்சி. மருத்துவர் என்பதால் அன்றைய தினம் யாருக்காவது மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் தயாராக இருப்பேன்'' என்றார்.

பாமக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால், குடும் பத்தினர் உற்சாகமாக கொண்டாடு வார்கள். அதில் ராமதாஸ் இணைந்து கொள்வார். கட்சியின ரின் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்வார் என்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. எனவே, அன்றைய தினம் விடுமுறை என்பதால் அதிக அளவில் கட்சி தொண்டர்கள் சந்திக்க வருவார்கள் என்பதால் ஓய்வே கிடைக்காது என்றனர்.

மொத்தத்தில் தீபாவளியை கொண்டாடினாலும், கொண்டாடா விட்டாலும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அன்றைய தினமும் ஓய்வு கிடைப்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x