Published : 30 Nov 2018 09:53 AM
Last Updated : 30 Nov 2018 09:53 AM

அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட‘தேஜஸ்’ ரயில் பெட்டிகள் ஐசிஎப்-ல் தயாரிப்பு: வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு இன்று அனுப்பப்படுகிறது

அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள் பெரம்பூர் ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள் வடக்கு ரயில்வே மண்ட லத்துக்கு இன்று அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் கூறும்போது, ‘‘பயணிகளுக்கு பல்வேறு சொகுசு வசதிகளுடன் கூடிய தேஜஸ் ரயிலுக்கான பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் ஐசிஎப் ஈடுபட்டுள்ளது.

23 ரயில் பெட்டிகள்

தற்போது 23 ரயில் பெட்டிகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவை வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு இன்று அனுப்பப்படவுள்ளன.

இதில், ஏசி வசதியுடன் அமரும் 18 ரயில் பெட்டிகளும், 2 உயர் வகுப்பு ரயில் பெட்டிகளும்,3 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் அடங்கும்.

இந்த ரயில்களில் எப்ஆர்பி தகடுகளால் ஆனஅழகிய உட்புறத்துடன் சொகுசாக அமர்ந்து பயணம் செய்யும் வசதியான இருக்கைகள் உள்ளன.

வீடியோ திரைகள்

ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் பாடல்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களை அறியும் பொருட்டு சிறிய வீடியோ திரைகள், மத்தியில் அமரும் பயணிகளுக்கு சிற்றுண்டி மேசையின் உட்புறம் மடக்கும் வசதி கொண்ட வீடியோ திரைகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்ஈடி விளக்குகள் உள்ளன.

மேலும் ரயில் பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உட்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள், செல்போன் சார்ஜிங் செய்யும் வசதி, கழிப்பறை கண்ணாடிகளில் உள்ளமைந்த தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்இடி விளக்கு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உயர் வகுப்பு குளிர் வசதி இருக்கை ரயில் பெட்டிகளில் ஒரு பெட்டியில் 56 பேரும், ஏசி வசதி இருக்கை ரயில் பெட்டிகளில் ஒரு பெட்டியில் 78 பேரும் பயணிக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x