Published : 14 Nov 2018 04:20 PM
Last Updated : 14 Nov 2018 04:20 PM

குதிரை உதைத்ததில் காவலரின் தாடை உடைந்தது: கண் பார்வை பறிபோனது

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் குதிரை உதைத்ததில் ஆயுதப்படை காவலருக்கு கண் பார்வை பறிபோனது.

சென்னை காவல் துறையில் குதிரைப்படைக்கென தனிப்பிரிவு உள்ளது. கலவரக் காலங்களில் ஜனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக குதிரைப் படை குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சென்னை  புதுப்பேட்டையில் சென்னை காவல்துறைக்கென குதிரைகள் பராமரிப்பு மையம் உள்ளது.

சென்னை ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன் (27). சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.  சென்னை ஆயுதப்படைக்குச் சொந்தமான குதிரைகளுக்குப் பயிற்சி அளித்து வரும் பணியில் உள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் குதிரைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குதிரை திடீரென மணிகண்டனின் முகத்தை எட்டி உதைத்தது. இதில் மணிகண்டனின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகே இருந்த சக காவலர்கள் மணிகண்டனை மீட்டு, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்தனர்.

மணிகண்டனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் கண்ணில் காயம் பலமாக ஏற்பட்டதால் அவரது ஒரு கண்ணின் பார்வை பறிபோய் விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குதிரை பலமாக உதைத்ததில் மணிகண்டனுக்கு இடது பக்கத் தாடையும் உடைந்துள்ளது. இதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிகண்டன் கடந்த 2013-ம் ஆண்டு முதல் குதிரைப் படையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x