Published : 04 Nov 2018 12:06 AM
Last Updated : 04 Nov 2018 12:06 AM

‘தி இந்து- ‘என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நிறைவு விழா: சிறந்த படைப்புகளை அளித்த மாணவர்களுக்கு பரிசு

ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு  ‘தி இந்து'குழுமத்துடன்  ‘என்எல்சி இந்தியா'நிறுவனம் இணைந்து தமிழகம்முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டிகளை நடத்தின. இதன் நிறைவு விழா, நெய்வேலியில் நேற்று நடைபெற்றது. மாநில அளவில் சிறப்பாக சாதனை படைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கடந்த அக்.29-ல் தொடங்கி நவ.3வரை ஊழல் கண்காணிப்பு வாரம்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்காக சென்னை, கோவை, புதுச்சேரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், திருச்சி, வேலூர்  ஆகிய 9 நகரங்களில்  ‘தி இந்து' குழுமம் மற்றும்  ‘என்எல்சி இந்தியா' நிறுவனம் இணைந்து  ‘ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்தின.

இதன் நிறைவு விழா நெய்வேலியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய என்எல்சிஇந்தியா நிறுவன மின்துறை இயக்குநர் தங்கப்பாண்டியன் பேசியது: ஆகாய விமானத்தில் பயணம் செய்பவர்கள் ஏற்கெனவே பல முறை பயணித்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சீட் பெல்ட்டை அணிய  வற்புறுத்தப்படுவதுபோல, ‘ஊழல் என்பது தீமை'  என்றுஅனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இதுபோன்ற,  ‘ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்' மூலம் அவ்வப்போது நினைவூட்டுவது அவசியம்'' என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் பேசும்போது, “பேராசை, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு மற்றும் அரசியல் காரணங்கள் ஆகியவை ஊழலுக்கு முக்கிய காரணங்கள். இருந்தாலும் தனி மனித விழிப்புணர்வு  இல்லாதது அதைவிட முக்கிய காரணம். நமதுநல்ல செயல்கள் நமது மனத்தையும், சமூகத்தையும் தூய்மைப்படுத்தும் மருந்தாக அமையும். இதன் மூலம் ஊழல் இல்லா சமூகத்தை உருவாக்கலாம்'' என்றார்.

என்எல்சி இந்தியா நிறுவன கண்காணிப்பு தலைமை அதிகாரி வெங்கட சுப்ரமணியன் பேசும்போது. “பள்ளி குழந்தைகளுக்கு நன்னெறி வகுப்புகள் நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு என்எல்சி இந்தியா  சிறப்பு பயிற்சிவழங்க உள்ளது. ஒரு வார காலம்நடைபெற்ற ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவில், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 67 வகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா மனிதவள இயக்குநர் விக்ரமன், திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் என்என்எம்.ராவ் உள்ளிட்ட நிறுவன உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் ஆர்வம்

நிகழ்ச்சியை முன்னிட்டு முன்னதாக  மாநில அளவில் நடத்தப்பட்ட  ஓவியப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளில்  சுமார் 450 பள்ளிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம்மாணவ, மாணவிகள்  ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விழாவில் மாநில அளவில் ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற (ஜூனியர் பிரிவு) புதுச்சேரி அமலோற்பவம் லூர்து கல்வி நிலைய 6-ம் வகுப்பு மாணவர் விகாஸுக்கு முதல் பரிசும்,  சீனியர் பிரிவில் கோவை விமானப்படை கல்வி நிலையத்தின் 8-ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமிக்கு முதல் பரிசும், கவிதைப் போட்டியில் கல்பாக்கம் அணுமின் பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் தினகருக்கு முதல் பரிசும் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x