Published : 03 Nov 2018 01:29 PM
Last Updated : 03 Nov 2018 01:29 PM

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‘ஈகோ’ காட்டாமல் ஒன்றிணைய வேண்டும்: கி.வீரமணி

பாஜகவை தோற்கடிக்க ‘ஈகோ’ காட்டாமல், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து, பாசிசத்தைக் கைக்கொண்டு, யதேச்சதிகாரத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.

மத்திய பாஜக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தி!

ஜனநாயகம் - மதச்சார்பின்மை - சமூகநீதி - அடிப்படை உரிமைகள் எல்லாம் அரசியல் சட்டத்தின் ஏட்டுச் சுரைக்காய் தான் எங்களுக்கு - நடைமுறையில் ‘நானே ராஜா’ என்பது போலத்தான் மத்திய ஆட்சி நடைபெறுகிறது. எல்லா தரப்பினரும் ஏகமான அதிருப்திக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கார்ப்பரேட்டுகளின் கருணை ஆட்சியாக ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சி அமைந்து நாளும் ஒவ்வொரு நிறுவனமும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படும் நிலை - திட்டக்கமிஷனில் தொடங்கி, மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி வரை அதன் ஆதிக்க ஆக்டோபஸ் கொடுங்கரங்கள் நீண்டு விட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாகக் குமுறும் நிலை!

பண மதிப்பிழப்பு, விண்ணை முட்டும் விலைவாசி, வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், வெளிநாட்டுச் செலாவணி கையிருப்புத் தேய்வு, விவசாயிகளின் குமுறல் - பல்லாயிரவர் தற்கொலை என்றுமில்லாத அளவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தங்கள் குமுறலைப் பகிரங்கமாகக் கொட்டும் அசாதாரண நிகழ்வுகள் பல அரங்கேறுகின்றன.

பல துறைகளில் ஊழல்கள் விமானமாகப் பறந்து கொண்டுள்ள கேலிக் கூத்தான நிலை உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடமை என்ன?

இவைகளைக் கண்டு அனைத்துத் தரப்பு மக்களும் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இவற்றை - இந்த எதிர்ப்புணர்வை நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் - தங்களது தன்முனைப்பு பதவியாசைகளை ஒரு வரைமுறைக்குள் அடக்கிக் கொண்டு, பற்றி எரியும் தீயை அணைப்பதிலே எப்படி ஒரு வகையான கட்டுப்பாட்டுடன் போராடுவார்களோ, அதுபோல ஓரணியில் திரண்டு நின்று, மதவெறி சக்திகளை மீண்டும் காலூன்றச் செய்யாது தடுக்கவேண்டும்.

இதற்கான நல்ல அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

ராகுலுடன் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு திமுக தலைவர் வரவேற்பு - வரவேற்கத்தக்கது!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசி, தேசிய அளவில் ஒரு கூட்டணி அல்லது உடன்பட்டோர் அணியை உருவாக்கிட எடுத்த முயற்சி நல்லதோர் முயற்சி.

இதனை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது. தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்ப்பந்தம் என்று சந்திரபாபு நாயுடு சொன்னதை நான் வழிமொழிகிறேன். மாநில சுயாட்சியைப் பறிக்கும் பா.ஜ.க. அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணையவேண்டும் என திமுக தலைவர் கூறிய கருத்து சரியான நேரத்தில் வந்த சரியான கருத்து. அந்த கருத்து சரியானவரிடமிருந்து வந்துள்ளது.

ஒருங்கிணைப்புக் குறித்துபெரியார் கருத்து

தமிழ்நாட்டிலும் ஒத்த நோக்கத்தவர்களை ஒருங்கிணைத்து - நமது இலக்கினைத் தெளிவுபடுத்த வேண்டும். பெரியார் பொதுநோக்குடன் இணைபவர்கள் எப்படி நடந்தால் அது வெற்றியடையயும் என்பதையும் விளக்குவார். எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்தவேண்டும்; ஆழப்படுத்தவேண்டும். எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்தவேண்டும். இந்த எளிமையான புரிந்துணர்வை அந்தரங்க சுத்தியுடன் முயன்றால் நமது பொதுநோக்கம் வெற்றி பெற்றே தீருவது உறுதி.

கூட்டணி என்பதுகூட பிறகு; உடன்பட்டவர்கள் அணி என்பது முதலில்.

வேற்றுமைகளைக் களைவோம் - ஒற்றுமையை உருவாக்குவோம்

வேற்றுமைகளைப் புறந்தள்ளி, தன்முனைப்பையும் தள்ளி வைத்து, காட்டுத் தீயாகப் பரவிடும் மதவெறித் தீயை, யதேச்சதிகாரத்தினைத் தடுத்து நிறுத்திட உறுதி ஏற்பது முக்கியம். எத்தனை இடங்கள் என்பது இப்போது முக்கியமல்ல; எந்த ஒரு எதிரியும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற வியூகமே முதன்மையானது, முன்னுரிமைக்குரியது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நமது வேண்டுகோள் இது” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x