Published : 28 Nov 2018 12:16 PM
Last Updated : 28 Nov 2018 12:16 PM

ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக அறிவிப்பு

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது தொடர்பாக திமுக சார்பில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு செயல்திட்டத்தை உருவாக்கி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரி அனுப்பி வைத்தது.  மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக மாநிலம் அளித்த செயல்திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை சமீபத்தில் அனுமதி அளித்தது. கர்நாடக அரசு இத்திட்டத்திற்கு 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேகதாதுவில் தடுப்பு அணை கட்டினால், தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக அரசுக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29.11.2018 அன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x