Published : 24 Nov 2018 08:39 PM
Last Updated : 24 Nov 2018 08:39 PM

சென்னையில் காவலர்களுக்கான மன மேம்பாடு பயிற்சி: பொதுமக்களை கனிவுடன் அணுக வேண்டும்: ஆணையர் அறிவுரை

காவலர்களுக்கான  மன மேம்பாட்டிற்கான  பயிற்சி  வகுப்பை   சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். இது சென்னை முழுதும் பரவலாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள், பொதுமக்களுடனான நல்லுறவை சிறந்த முறையில் மேம்படுத்துவற்காக ’மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி அளிக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தவிட்டார்.

அதன் பேரில் முதற்கட்டமாக வடக்குமண்டலம் மற்றும் மேற்குமண்டலத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்காக மன மேம்பாட்டிற்கான பயிற்சி இன்று காலை அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

மன  மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் காவலர்களிடையே அவர் பேசும்போது,

“காவலர்கள், காவல் நிலையத்திற்கு கண்ணீரும் கம்பலையுமாக தங்கள் குறைகளுடன் வரும் பொதுமக்களிடம் கனிவுடனும், மரியாதையுடனும் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து சேவையாற்ற  வேண்டும். பொதுமக்கள் பிரச்சனை வந்தால் முதலில் அணுகக் கூடிய நிலையில் காவலர்கள் இருக்க வேண்டும்.

கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தும் விதமாக காவலர்களும், காவல்நிலையமும் அமைந்துவிடக் கூடாது, காவல்நிலையங்களுக்கு வரும் மக்களை வாங்க என முதலில் வரவேற்கவேண்டும்.”  

என கேட்டுக்கொண்டார்.   

இதனை தொடர்ந்து மன நல மருத்துவரும் ஆலோசகருமான  ஷாலினி மனமேம்பாட்டிற்கான தகுந்த ஆலோசனைகளை விரிவாக எடுத்துரைத்தார். அதன் பின்னர் திரைப்பட நடிகர் தாமு அவர்கள்  பொதுமக்களுடன் நல்லுறவை எவ்வாறு பேணுவது என்பது குறித்து விரிவாக பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு கூடுதல் காவல் ஆணையாளர் தினகரன், மேற்கு மண்டல இணை ஆணையாளர் விஜயகுமாரி, புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் ஷாய் சரண் தேஜாஸ்வி, வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் ரவலி ப்ரியா காந்தபுனேனி, அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் சுதாகர், அம்பத்தூர் காவல் துணை ஆணையாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சரக உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலையங்களில் எழுத்தர் மற்றும் வவேற்பாளர்களாக பணிபுரியும் சுமார் 500  காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர்களிடம் இந்நிகழ்வுப்பற்றி பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இது ஆரம்பம்தான் இதுபோன்ற நிகழ்வு அனைத்து துணை ஆணையர்களுக்குட்பட்ட பகுதிகளிலும் நடத்தப்படும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x