Published : 05 Nov 2018 09:43 AM
Last Updated : 05 Nov 2018 09:43 AM

உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு, மழை எச்சரிக்கைக்கு இடையே சென்னையில் பட்டாசு விற்பனை சூடுபிடித்தது : தள்ளுபடி விலையில் விற்கும் வியாபாரிகள்

உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் மழை எச்சரிக்கைக்கு இடையிலும், சென்னையில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, புத்தாடைகள், இனிப்பு வகைகள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவு காரண மாக சற்று மந்தமாக இருந்த பட்டாசு விற்பனை நேற்றுமுதல் சூடுபிடித்தது.

சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய இடங்களில் கடந்த 29-ம் தேதி பட்டாசு விற்பனை தொடங்கியது. தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். சிறுவர்களின் வசதிக் காக துப்பாக்கி வகைகள் தனியாக விற்பனை செய்யப்பட்டன.

புதிய ரக பட்டாசுகளுடன், வழக்கமாக விற்பனையாகும் தரைச் சக்கரம், ராக்கெட், கம்பி மத்தாப்பு, பொட்டு வெடி, சரவெடி, வானில் வர்ணஜாலம் காட்டும் வாணவேடிக்கை பட்டாசுகள், பிஜிலி வெடி, பேன்சி ரக பட்டாசுகள், புஸ்வாணம், தரையில் வண்ணம் எழுப்பும் பட்டாசுகள், சாட்டைகள் விற்பனை அதிகமாக இருந்தது.

லட்சுமி, கும்கி, குருவி பெயர் கொண்ட வெடிகளை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதிக ஒலி எழுப்பும் வெடி வகைகளின் உற்பத்தி குறைவாக இருந்தாலும், அந்த வெடிகளை இளைஞர்கள் கேட்டு வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.

ரூ.250 முதல் ரூ.4,000 வரையி லான ‘கிஃப்ட் பாக்ஸ்’ விற்பனையும் அமோகமாக நடந்தது.

பட்டாசு வாங்க வந்த இளைஞர் கள் சிலர் கூறும்போது, ‘‘தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும், வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடுவோம். ஒரு மணி நேரத்தில்கூட பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை வெடிக்க முடியும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும் என்பதால், அனைவரும் ஒரே நேரத்தில் வெடிப்பார்கள். அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு பட்டாசு சத்தம் காதைப் பிளக்கும்’’ என்றனர்.

பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது:

தீபாவளியன்று (நவம்பர் 6) தொடங்கி அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டுபோல, மழையால் பட்டாசுகள் விற்காமல் தேங்கி விடக்கூடாது என்பதால், லாபத்தைக் குறைத்து விற்கிறோம்.

போட்டி காரணமாக, ‘ஒரு பாக்ஸ் வாங்கினால் ஒரு பாக்ஸ் இலவசம்’ என்றுகூட சிலர் விற்கின்றனர். 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் பட்டாசுகள் விற்கப்படுகின்றன.

பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித் திருப்பதால், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்து, விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர் களைப் பிடிக்க நூற்றுக்கணக் கான தனிப்படைகள் அமைத்திருப்ப தாகவும், மற்ற நேரங்களில் வெடிப் பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் பட்டாசு விற்பனை பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x