Published : 14 Nov 2018 11:48 AM
Last Updated : 14 Nov 2018 11:48 AM

பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நீக்கம்: கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல்; வைகோ கண்டனம்

அழகப்பா பல்கலைக்கழகம் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' நாடகத்தை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்காவிட்டால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்க நேரிடும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசின் பல்கலைக்கழகமாக இயங்கி வரும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இளங்கலை தமிழ்த்துறைப் பாட நூல்களில் ஒன்றாக அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம் இடம் பெற்றிருந்தது. இதனை நவம்பர் 9 ஆம் தேதி நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக திரைப்பட வசனகர்த்தா அரு.ராமநாதன் எழுதிய 'ராஜராஜ சோழன்' பற்றிய நூல் சேர்க்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழு அளித்த பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மேம்பாட்டுத் துறைத் தலைவர் விளக்கம் அளித்திருக்கிறார். அண்ணாவின் நாடக நூலை நீக்கி விட்டு, அதற்குப் பல்கலைக்கழகம் அளித்துள்ள விளக்கம் விசித்திரமாக உள்ளது.

'நீதிதேவன் மயக்கம்' நாடகத்திற்கு விளக்கமளிக்கக் கூடிய வழிகாட்டல் நூல்கள் இல்லை என்றும், அவற்றை வாங்குவதற்கு மாணவர்கள் அதிகம் செலவிட வேண்டியதாக இருக்கிறது என்றும் பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழு கருதுகிறதாம். அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' நாடக நூலுக்கு வழிகாட்டல் நூல்கள் கிடைக்காவிடில், அதனைத் தேடிப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு இருக்கிறது.

ஆனால், மூல நூலையே வேண்டாம் என்று பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தூண்டும் பழமைவாதங்களை மூடக் கருத்துகளைச் சாடும் 'நீதிதேவன் மயக்கம்' நாடகம், சமூக நீதியை மையக் கருவாகக் கொண்டது ஆகும். அண்ணாவின் படைப்புகள் எளிய வார்த்தைகளில் வலிய கருத்துகளை எடுத்து இயம்புவதாகவே இருக்கின்றன.

'நீதிதேவன் மயக்கம்' நாடகத்தை நீதிமன்றத்தில் நடக்கும் உரையாடல் வடிவத்தில், எளிதில் கருத்துகளை இதயத்தில் ஊடுருவச் செய்யும் வகையில் அண்ணா படைத்திருக்கிறார். இதனை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு தனி வழிகாட்டல் நூல்கள் தேவை இல்லை. ஆனால், அழகப்பா பல்கலைக்கழகப் பாடத் திடடக்குழு, அண்ணாவின் நாடகத்தை நீக்கிவிட்டு, அதற்குக் காரணம் கூறியிருப்பது நியாயம் அல்ல.

அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' நாடகத்தையே தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகப் பாட நூலில் இருந்து நீக்குகின்ற துணிச்சல் இவர்களுக்கு எப்படி வந்தது? கடந்த நான்கரை ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் சனாதனப் பிற்போக்குக் கும்பலின் ஊடுருவல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அறிவுத் துறையில், ஆராய்ச்சித் துறையில் திணிக்கப்பட்டு வரும் சனாதனக் கூட்டத்தின் கருத்துகள், தற்போது தமிழ்நாட்டின் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களிலும் புகுத்தப்படுவதை மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்க முடியாது. தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் டெல்லிக்கு 'அடமானம்' வைத்து விட்ட ஆட்சியாளர்கள் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டு, அவரது சிந்தனைப் படைப்புகளுக்குத் தடைபோடத் துணிந்து இருக்கின்றனர்.

அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' நாடகத்தை அழகப்பா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி இருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அழகப்பா பல்கலைக்கழகம் அண்ணாவின் படைப்பை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்; இல்லையேல் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்க நேரிடும்" என வைகோ எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x