Published : 17 Nov 2018 02:35 PM
Last Updated : 17 Nov 2018 02:35 PM

கஜா புயல்: மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கை எடுத்தது; விஜயகாந்த் பாராட்டு

'கஜா' புயல் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு விழிப்புடன் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசும், அமைச்சர்களும் 'கஜா' புயல் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற விழிப்புடன் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. இரவும், பகலும் பாராமல் கண் விழித்து விரைவாகச் செயல்பட்ட அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் உடனுக்குடன் ஆணை பிறப்பித்து சிறப்பாக பணிகளை ஆற்றியதற்கு தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.

மிக முக்கிய புயல் பாதிப்புக்கான இடமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிக வீடுகள் இழப்பு, மீனவர்கள் படகுகள் சேதம், தென்னை, வாழை, விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டும், 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி வேதனைக்குரியது.

உடனடியாக மத்திய அரசு புயல் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு தந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு படகுகள் சரிசெய்வதற்கும், வீடுகள் சேதம் அடைந்ததை சரிசெய்வதற்கும், சாலைகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பதற்கும், மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்வதற்கும் உதவிட வேண்டும்.

தமிழக அரசு 'கஜா' புயல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் 'கஜா' புயல் பாதிப்பை உடனடி கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கும், அந்தப் பகுதி மக்களுக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டும்" என விஜயகாந்த் வலியறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x