Published : 30 Nov 2018 12:35 PM
Last Updated : 30 Nov 2018 12:35 PM

"முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன்; இது சத்தியம்": பொன் மாணிக்கவேல் பேட்டி

தான் முழு மனதுடன் ஓய்வு பெறுவதாக, ஓய்வுபெற்ற ஐஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். கடந்த சில ஆண்டுகளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வந்த பொன் மாணிக்கவேல், தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகள் பலவற்றை மீட்டார்.

பொன் மாணிக்கவேல் 1958-ம் ஆண்டு பிறந்தார். 1989-ம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் நேரடி டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெற்றார். சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் கோயில் சிலைகள் கொள்ளை போனதைக் கண்டுபிடித்து அதில் தொடர்புடையவர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்தும் மீட்டுக் கொண்டு வந்தார்.

பொன்.மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "காவலர்களுக்கு பணிச்சுமை இருக்கிறது. அதனால், அவர்களின் குடும்பத்தினரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை சட்டம் என்ன சொல்லுகிறதோ அதை மட்டுமே செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் தங்களின் உயரதிகாரிகளின் சேவகர்கள் அல்ல. அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்க வேண்டும். அவர்களின் அறிவுரை சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். வேலையை முடித்துவிட்டு பேசாமல் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதன்பிறகு, செய்தியாளர் ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வியெழுப்பியபோது "எனக்குத் தெரியாது" என பதிலளித்தார்.

பின்னர், முழுமனதுடன் ஓய்வு பெறுகிறீர்களா என கேட்டபோது, "சத்தியமாக முழுமனதுடன் ஓய்வு பெறுகிறேன். ஊடகங்களின் ஆதரவுடன் முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன். அதிகாரிகளால் தான் எனக்குப் பிரச்சினை. அரசியல்வாதிகளாலோ அரசாலோ எந்தத் தொந்தரவும் இல்லை" என பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x