Published : 09 Nov 2018 12:52 PM
Last Updated : 09 Nov 2018 12:52 PM

சர்கார்- வியாபாரத்துக்கு அமைச்சரவை கூடுகிறது; ராஜலட்சுமிக்கு என்ன செய்தது?- சபரிமாலா வேதனை

சினிமா என்னும் சாதாரண வியாபாரத்துக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. ஆனால் தலை வெட்டி இறந்த சிறுமி ராஜலட்சுமிக்கு என்ன செய்தது என்று சர்கார் சர்ச்சை குறித்து ஆசிரியை சபரிமாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அதிமுக.வினருக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் காசி, ஆல்பர்ட், தேவி ஆகிய திரையரங்கங்கள் உள்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ‘சர்கார்’ படத்தின் பேனரைக் கிழித்தும், போஸ்டரைத் தீயிட்டுக் கொளுத்தியும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக.வினர் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ‘சர்கார்’ படத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதா தற்கொலை செய்ததைக் கண்டித்து தனது அரசுப் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், '' 'சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை  நீக்குவது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் சட்ட அமைச்சர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியானது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

சினிமா என்பது சாதாரண வியாபாரம்; கனவுத் தொழிற்சாலை. சம்பளம் வாங்கிக்கொண்டு கதையில் அவர்கள் நடிக்கிறார்கள். அதுவொரு நிழல். நிழலில் காட்டிய காட்சிக்காக அமைச்சரவை கூடியிருக்கிறது.

சேலத்தில் சிறுமி ராஜலட்சுமி தலை வெட்டப்பட்டு இறந்தாள். அதற்காக எந்த அமைச்சரவையும் கூடவில்லை. எந்த சட்ட அமைச்சரும் ஆறுதல் சொல்லவில்லை. இது உண்மையிலேயே தேசிய அவமானம்'' என்றார் சபரிமாலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x