Published : 26 Nov 2018 09:19 PM
Last Updated : 26 Nov 2018 09:19 PM

காவலரை ஆய்வாளர் தள்ளிவிட்ட சம்பவம்; மனித உரிமை மீறல் இல்லையா?-  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மனித உரிமை ஆணையம் கமிஷனரிடம் அறிக்கை கேட்டது

மோட்டார் சைக்கிளில் வந்த போக்குவரத்து காவலரை ஆய்வாளாரே சாலையில் தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிபவர் தர்மராஜ்(41). சமீபத்தில் இறந்த தனது அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக, ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் விடுமுறை கேட்க, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த தர்மராஜ், அத்தியாவசிய தேவைக்குக்கூட விடுமுறை கொடுக்க மறுக்கிறார் என்று வாக்கி-டாக்கி மூலம் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் தர்மராஜ் மீது கோபம் அடைந்த ஆய்வாளர் ரவிச்சந்திரன், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தர்மராஜை பிடிப்பதாககூறி, அவரை கீழே தள்ளிவிட்டார்.

கீழே விழுந்த தர்மராஜுக்கு தோள்பட்டை எலும்பில் முறிவும், கால் பெருவிரலில் முறிவும் ஏற்பட்டது. ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக குற்றவாளியை பிடிப்பதுபோன்று பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் மது அருந்தியுள்ளதாக அறிக்கைப் பெற்று அவரை பணியிடை நீக்கமும் செய்ய வைத்தார் ஆய்வாளர் ரவிச்சந்திரன்.

காயம்பட்ட தர்மராஜ தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். போக்குவரத்து ஆய்வாளர் தள்ளிவிட்ட காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூகவலைதளங்களில் பரவியது.  இதனால் ஆய்வாளர் ரவிச்சந்திரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவிட்டார். ரவிச்சந்திரன் செயலுக்கு மேலும் எதிர்ப்பு வலுக்கவே, தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தர்மராஜுக்கு வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றி, மருத்துவமனையில் சான்றிதழ் வாங்கப்பட்டிருப்பதாகவும் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது மனைவி ஸ்ரீதேவி தனது கணவரை கீழே தள்ளி கொல்ல முயன்றதாக ரவிச்சந்திரன் மீது புகார் அளித்து கொலை முயற்சி வழக்கில் கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

புகார் அளிக்க அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற தர்மராஜின் மனைவி ஸ்ரீதேவியை பல மணி நேரம் காத்திருக்க வைத்தனர். 5 மணி நேரத்திற்கு பின்னரே புகாரின் மீதி சிஎஸ்ஆர் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட விபரங்களை பத்திரிகை செய்தி வாயிலாக அறிந்த மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை தாமே முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமை ஆணையம் எவ்வாறு விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆய்வாளர் ரவிச்சந்திரன் காவலர் தர்மனை ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து தள்ளிவிட்டது மனித உரிமை மீறல் இல்லையா?

இந்த சம்பவத்தில் அபிராமபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்ட தர்மராஜின் மனைவியிடம் புகாரை பெற்று சிஆர்பிசி 154 பிரிவின் கீழ் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

இதுகுறித்து காவல் ஆணையரோ அல்லது அவருக்கு கீழ் உள்ள இணை ஆணையர் அந்தஸ்த்துக்கு குறையாத பணியில் உள்ள அதிகாரியை வைத்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

விசாரணையில் புகார்தாரரிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவேண்டும், அவ்வாறு புகார்தாரர் நேரில் ஆஜராகதப்பட்சத்தில் அதுகுறித்த உரிய புகாரை இணைக்கவேண்டும்.

அனைத்து விசாரணைகள், யார் யாரை விசாரித்தீர்கள், என்ன மாதிரியான விசாரணை என அனைத்தையும் முழு அறிக்கையாக தயாரித்து 4 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேற்கண்ட உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x