Published : 07 Aug 2014 12:21 PM
Last Updated : 07 Aug 2014 12:21 PM

சம்பா சாகுபடிக்காக ஆக.15-ல் மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சம்பா பருவ சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 15-ம் தேதி முதல் நீர் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஜெயலலிதா: "உணவினை அளித்து, நல் வளங்களை வழங்கி, விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழும் காவேரி நீர் மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு, நீர் இருப்பினை பொறுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திலோ அல்லது அதற்கு பின்னரோ திறந்து விடப்படும்.

இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.40 அடியாக இருந்ததாலும், தென் மேற்கு பருவமழை 5.6.2014 அன்று கர்நாடகா – கேரளா நீர்பிடிப்பு பகுதிகளில் துவங்கி பின்னர் குறைவடைந்ததாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 அன்று தண்ணீர் திறந்துவிட இயலவில்லை.

தற்போது கர்நாடகா-கேரளா மாநிலங்களில், காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளான ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகியன முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து 6.8.2014 மாலை நிலவரப்படி 93.24 அடியாக, அதாவது 56.432 டி.எம்.சி. அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு கணிசமான நீர் வந்து கொண்டிருக்கிறது.

காவேரி நீர்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் நன்றாக இருக்கும் என்பதை எதிர்நோக்கியும், தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை கருத்திற் கொண்டும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்பதை கருத்திற் கொண்டும், சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, 15.8.2014 முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

இதன் மூலம், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வீணாகாமல், காவேரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் பாசனப் பகுதிகளில் உள்ள கிளை ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றிற்கு நீரைப் பகிர்ந்து அளிக்கவும், ஏரிகளில் நீரை சேமிக்கவும் வழிவகை ஏற்படும்" இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x