Published : 07 Nov 2018 02:23 PM
Last Updated : 07 Nov 2018 02:23 PM

விஜய்க்கு நல்லதல்ல; சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

'சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி நடிகர் விஜய்க்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையான நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. கதை சர்ச்சை, அதைத் தொடர்ந்து சமரசம் என பரபரப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்திற்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ’சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று (புதன்கிழமை) அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். 'சர்கார்' திரைப்படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக எழுந்த புகார் குறித்தும், இலவசப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் செய்தியாளர்கள் வினா எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, “ 'சர்கார்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அது கலாநிதி மாறனின் நிறுவனம். இந்தப் படத்தின் மூலம் அவர்கள் அரசியல் நோக்கத்தைக் காண்பித்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது என் கருத்து.

வளர்ந்து வரும் நடிகரான விஜய் இதுபோன்று நடித்திருப்பது நல்லதல்ல. சில காட்சிகள் படத்திற்காக அல்லாமல் அரசியலுக்காக வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது.

'சர்கார்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. 'சர்கார்'  படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். அக்காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினருக்கு அறிவுறுத்தப்படும். அவற்றை படக்குழுவினரே நீக்கி விட்டால் நல்லது.முதல்வருடன் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x