Published : 01 Nov 2018 05:20 PM
Last Updated : 01 Nov 2018 05:20 PM

அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்த்தபோது அவர் மயக்க நிலையில் இருந்தார்: வித்யாசாகர் ராவ்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதத்தின் நகல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆளுநர் மாளிகைக்கு மருத்துவ அறிக்கைகள் அனுப்பப்பட்டது குறித்தும், குடியரசுத் தலைவருக்கு அப்போதைய ஆளுநர் கடிதம் ஏதும் எழுதினாரா? என்பன உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய கடிததத்தை அனுப்பி இருந்தது. இதற்கு ஆளுநர் மாளிகை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பதில் அளித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் ராஜ்பவனுக்கு சில கேள்விகளை எழுப்பி பதில் கேட்டிருந்தது.

ஆறுமுக சாமி ஆணையம் கீழ்கண்ட கேள்விகளை வைத்ததாகக் கூறப்பட்டது. அவை வருமாறு:

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அனுப்பப்பட்ட மருத்துவக் குறிப்புகள் எத்தனை? மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின் பொறுப்பு ஆளுநருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டதா? இதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளித்ததா?

மருத்துவமனையில் ஆளுநர் முதல்வரைப் பார்த்துவிட்டுச் சென்ற பின்னர் அதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா? முதல்வர் உடல்நிலை, மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்போலோ, எய்மஸ் மற்றும் ராஜ்பவனிடையே கடிதத் தொடர்பு இருந்ததா? கடிதத் தொடர்பு குறித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டதா ? என்று கேள்விகளுக்கு ஆணையத்திடம் விளக்கம் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு அக்.6-ம் தேதி முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதம், ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2016- ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி எழுதிய கடிதம் என்று இரண்டு கடிதங்களின் நகல் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஆளுநர் மாளிகையில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ஜெயலலிதா உடல் நிலை குறித்த பல்வேறு வதந்திகள் கிளம்பியதால் அக் 1-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குச் சென்று பார்த்ததாகவும், அப்போது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ குழுமத் தலைவர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைமைச் செயலாளரிடம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவ்வப்போது கேட்டறிந்ததாகவும் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நலம் பெற்று வர எழுதிய கடிதம், காவிரி தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டம், இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் பெயர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா வெளியிட்ட விவகாரம், சமூக வலைதளங்களில் ஜெயலலிதா குறித்து பரப்பபட்ட வதந்திகள், அது தொடர்பாக சைபர் கிரைம் எடுத்த நடவடிக்கைகள், அப்போது நிலவிய அரசியல் சூழல்கள் ஆகியவற்றை குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x