Published : 29 Nov 2018 08:21 PM
Last Updated : 29 Nov 2018 08:21 PM

திமுக தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார் சோனியா: விழாவில் பங்கேற்க இசைவு

மறைந்த, திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி. இதற்காக ஸ்டாலின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துக்கொள்ள அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து முறை தமிழக முதல்வராகவும், 50 ஆண்டுகாலம் திமுகவின் தலைவராகவும், 70 ஆண்டுகள் அரசியலுக்கு சொந்தக்காரராகவும், பேச்சால், எழுத்தாளுமையால் சமூக நீதிக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் கருணாநிதி. தொண்டர்களால் மரியாதையுடன் கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர் முதுமை காரணமாக கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலமானார்.

அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு சென்னை அறிவாலயத்தில் விரைவில் சிலை அமைக்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான பணியை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் வசம் ஒப்படைக்கப்பட்டு குறுகிய காலத்தில் அவர் சிலையை வடித்து முடித்தார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை, திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் உள்ள கண்ணகி சிலை, முரசொலி அலுவலகம், நாடாளுமன்ற வளாகம் ஆகிய இடங்களில் உள்ள முரசொலி மாறன் சிலை உள்ளிட்ட பல சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்தவர் சிற்பி தீனதயாளன்.

சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை சோனியா காந்தி தவிர்த்து வருகிறார்.

சோனியா கலந்துகொள்ளாவிட்டால் அவருக்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்று, கருணாநிதி சிலையை திறந்து வைப்பார் என திமுக வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். வரும் டிச. 16 அன்று அவர் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

மண்ணின் மிகச்சிறந்த மைந்தன், வாழ்நாள் முழுவதையும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் ஜனநாயகத்தை மாண்பை உயர்த்திப்பிடிப்பதிலும் அர்பணித்தவர் அவரது சிலைத்திறப்பு விழாவில் கலந்துக்கொள்வதை பெருமையாக கருதுகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிய இசைவு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் சிலைத்திறப்புவிழா எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் ஒரு மாபெரும் விழாவாக இருக்கும். தனது மறைவுக்கு பின்னும் மதவாத சக்திகளுக்கெதிரான தலைவர்களை ஒருங்கிணைக்கும் தன்மை கருணாநிதிக்கு உள்ளதை இந்த விழா உணர்த்தும் என திமுகவினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் முக்கியத் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x