Last Updated : 19 Nov, 2018 09:47 AM

 

Published : 19 Nov 2018 09:47 AM
Last Updated : 19 Nov 2018 09:47 AM

சீனப்பாய் வரவால் நலிவடையும் கோரைப்பாய் தொழில்: இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை

சீனப்பாய் வரவால் சேலத்தை அடுத்த ஓமலூர் சுற்று வட்டாரங்களில் உள்ள பாரம்பரிய கோரைப்பாய் உற்பத்தி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, இத்தொழிலை பாதுகாக்க தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என என பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் ஓமலூர் அடுத்த சின்ன திருப்பதி, தாராபுரம், ஊமக்கவுண்டம் பட்டி, சந்தனூர், செம்மாண்டபட்டி, புல்லானூர், கஞ்சநாயக்கன்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் 3 தலைமுறைக்கும் மேலாக கோரைப்பாய் உற்பத்தி தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு இத்தொழில் மூலம் 60 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பாய் உற்பத்திக்கான ஒரு தறியாவது இருக்கும். இங்கு டிசைன் பாய், வெள்ளை பாய், கான்கிரீட் பாய் உள்ளிட்ட 3 வகையான கோரைப்பாய் கள் உற்பத்தி செய்யப்படுகிறது. டிசைன் பாய்கள் வழக்கமாக வீடுகளில் பயன்படுத்தக் கூடியவை. கான்கிரீட் பாய், கட்டிடங்களில் கான்கிரீட் போடும்போது பயன்படுத்தப்படுபவை. வெள்ளை பாய் அதிகளவில் மேற்கு வங்க மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. அம்மாநிலத்தில் விளைவிக்கப்படும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்களை லாரியில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வெள்ளை பாய்கள் பயன்படுத்தப்படுகிறது.படுக்கைக்கு பாய்களை பயன்படுத்துவது குறைந்த விட்ட நிலையில், கான்கிரீட் பாய் மற்றும் வெள்ளை பாய் ஆகியவையே ஓமலூர் வட்டார கிராமங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கு அனுப்பப்படும் வெள்ளை பாய்களுக்கு போட்டியாக அங்கு சீனப்பாய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால், சேலத்து பாய்களின் விற்பனை 70 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது என்று இங்குள்ள உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாய் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களில் பாய் உற்பத்திக்கென 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தறிகள் உள்ளன. இங்கிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு நாளொன்று சராசரியாக 30 ஆயிரம் வெள்ளை பாய்கள் அனுப்பப்படும். ஆனால், சீனப்பாய் வரவினால் மாதத்துக்கு 50 ஆயிரம் பாய்கள் அனுப்பப்படுகிறது. இதனால், பாய் உற்பத்தியாளர்கள் பலரும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

மூலப்பொருளான கோரைப் புற்கள் கிடைப்பதும் குறைந்து வருகிறது. எனவே, அதிக விலை கொடுத்து அவற்றை வாங்க வேண்டியுள்ளது. கான்கிரீட் பாய் விற்பனையும் மந்தமாக உள்ளது. விலை மலிவான சீனத்து பாயுடன் போட்டியிட வேண்டுமென்றால், தமிழக அரசின் உதவி கிடைத்தால் மட்டுமே முடியும். நெசவுத் தொழிலுக்கு இலவச மின்சாரம் கொடுப்பது போல, பாய் நெசவுக்கும் இலவச மின்சாரம், வரிச்சலுகை வழங்க வேண்டும். தொழில் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு உதவிட வேண்டும். சீனப்பாய்களுக்கும் தடை விதிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x