Published : 10 Nov 2018 07:51 AM
Last Updated : 10 Nov 2018 07:51 AM

நாளை நடைபெறுகிறது குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. 1,199 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத் துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பதவிகளில் 1,199 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இத்தேர்வினை மாநிலம் முழுவதும் 400 மையங்களில் 6 லட்சத்து 26,503 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 54,136 பேர். பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 357 பேர். 10 பேர் 3-ம் பாலினத்தவர்.

குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு தாள், பொது தமிழ், பொது ஆங்கிலம் என 3 பாடங்கள் இருக்கும். இதில் பொது அறிவு பாடம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம். அந்த வகையில், பொதுத்தமிழ் பாடத்தை 4 லட்சத்து 80,694 பேரும் பொது ஆங்கிலம் பாடத்தை ஒரு லட்சத்து 45,809 பேரும் தேர்வு செய்துள்ளனர்.

தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி நேரம் நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும் 200 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவர். "ஒரு காலியிடத்துக்கு 10 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

அந்த வகையில், காலியிடங்களின் எண்ணிக்கை 1,199 ஆக இருப்பதால் ஏறத்தாழ 12 ஆயிரம் பேர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வில் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருப்பவர்களும் அழைக்கப்படுவதால் இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கக் கூடும். முதன்மைத் தேர்வானது விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x