Published : 16 Nov 2018 12:53 PM
Last Updated : 16 Nov 2018 12:53 PM

பெரியார் வாழ்க்கை ஒரு பாடம், நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்: எச்.ராஜாவுக்கு ராமதாஸ் பதிலடி

பெரியார் மணியம்மை குறித்து அவதூறாக எச் ராஜா பேசுகிறார், பெரியார் வாழ்க்கையிலிருந்து எச்.ராஜா போன்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் பதிலடி தந்துள்ளார்.

பாஜக தேசியச் செயலாளராக பதவி வகிக்கும் எச்.ராஜா அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், பெரியார் குறித்து சர்ச்சையாகப் பேசுவது அவரது வாடிக்கையான பேச்சுகளில் ஒன்று.

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தை விமர்சித்து நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகி நீதிமன்றம் தொடர்ந்த சூமோட்டோ வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டபோது இதேபோன்று தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று எச்.ராஜா பதிவிட்டு, அதனால் ஏற்பட்ட சர்ச்சையில் தான் பதிவைப் போடவில்லை, எனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று மறுப்பு வெளியிட்டார். இந்நிலையில் நேற்று மீண்டும் பெரியாரைப் பற்றி பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.

அரியலூர் மாவட்டம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வந்த எச்.ராஜா, பேட்டியில்  ''ஈவேரா பற்றியும் மணியம்மை பற்றியும் படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? யோசிக்க வேண்டாமா? ஒரு நீதிபதி கேட்கிறார், பள்ளிக்கூட குழந்தைகள் வயதானவரையும், கல்யாணம் ஆனவர்களையும் ஏன் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள்?  இதை அரசாங்கம் தடுக்க என்ன செய்திருக்கிறது? என்று கேட்கிறார். இதையெல்லாம் புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டாலே சரியாகிவிடும் என்கிறேன் நான்'' என்று சர்ச்சைக்கருத்தை தெரிவித்திருந்தார்.

எச்.ராஜாவின் இந்தப் பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பெரியார் வாழ்க்கை ஒரு பாடம் எச்.ராஜா போன்றவர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர்  எச்.ராஜா கூறியுள்ள கருத்துகள் அவதூறானவை என்று கண்டித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“எச். ராஜாவைப் போன்றவர்கள் மீண்டும், மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். தந்தைப் பெரியாரின் கொள்கைகள் சிறப்பானவை. தமிழ் சமுதாயத்துக்கு அவசியமானவை. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் கூட சமுதாயத்துக்கு பொருந்தக்கூடியவை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

தந்தைப் பெரியாரின் வாழ்க்கை அனைவருக்கும் பாடம். அவற்றிலிருந்து எச்.ராசா போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. தந்தை பெரியார் பற்றி பள்ளிப் பாடநூலில் பாடம் இடம்பெற்றிருப்பது குறித்து பாஜக தேசியச் செயலர் எச்.ராசா கூறியுள்ள கருத்துகள் அவதூறானவை; ரசனைக்குறைவானவை; கண்டிக்கத் தக்கவை.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x