Published : 05 Nov 2018 08:43 AM
Last Updated : 05 Nov 2018 08:43 AM

அளவுக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு: தமிழக நகரங்களுக்கும் டெல்லியை போன்று தடை வரலாம்

டெல்லியில் வாகனப் புகை, அருகாமை பகுதிகளில் தீயிட்டு கொளுத்தப்படும் விவசாயக் கழிவுகளால் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதோடு பட்டாசுகள் வெடிப்பதும் அதிகரித்ததால், டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டு, அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். காற்றை வடிகட்டும் முக கவசத்தை அணிந்துக்கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்துள்ளது.

தமிழகத்திலும் அண்மைக் காலமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, வாகனப் புகை, சாலைகளை முறையாக பராமரிக்காததால் பறக்கும் தூசி என காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது. இதற்கிடையில் சென்னை போன்ற பெருநகரங்களில் பட்டாசு வெடிப்பது அதிகரித்திருப்பதால், தீபாவளி நேரத்தில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகளில் தீபாவளியன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் எடுக்கப்பட்ட காற்று மாசு அளவின்படி, ஒரு கன மீட்டர் காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (மைக்ரோ கிராமில்) வேலூரில் முறையே 80, 142, 211, திருச்சியில் முறையே 96, 113, 125, சென்னையில் முறையே 126, 178, 777 என பதிவாகியுள்ளது.

இதன் மூலம் ஆண்டுதோறும் தீபாவளியன்று காற்று மாசு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு 100 மைக்ரோ கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சென்னை சவுக்கார்பேட்டையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 7 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில், டெல்லியைப் போல பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை வர வாய்ப்புகள் உள்ளன

அண்மைக் காலமாக தீபாவளி நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து பட்டாசு புகை மேலே செல் லாமலும், சிதைவடையாமலும் கீழேயே தங்கிவிடு கிறது. இதனால் மாசு மேலும் அதிகரிக்கிறது.

வானிலை மைய அனுமதி

நாம் பட்டாசு வெடிப்பதை குறைத்துக் கொள்ளாவிட்டால் வருங்காலத்தில் வானிலை ஆய்வு மைய அனுமதியின்றி பட்டாசு வெடிக்க முடியாது என்ற நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தீபாவளியின்போது காற்று மாசை குறைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

காற்று மாசு ஏற்படுவதை குறைக்கும் விதமாக பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிக்குமாறு பல்வேறு குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் காற்று மாசு குறையும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x