Published : 16 Nov 2018 09:30 PM
Last Updated : 16 Nov 2018 09:30 PM

எதிரிகளாக இருந்தாலும் நல்லதைப் பாராட்டவேண்டும்: டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு பாராட்டு

கஜா புயலில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிறைய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தமிழக அரசை பாராட்டியுள்ளார்.

 

வடகிழக்கு பருவமழையை ஒட்டி வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயலினால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்கிற நிலையில் தமிழக அரசு குறிப்பாக வருவாய்த்துறை, அதன்கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை துறை இணைந்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டது.

வருவாய்த்துறை அமைச்சர் மேற்பார்வையில் புயல் தாக்கிய நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை ஒருங்கிணைத்து அமைச்சர்கள் வழிகாட்டுதலுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் அச்சமின்றி இயங்கும் வகையில் ஊடகங்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு தகவலை அளித்து பேரிடர் மேலாண்மைத் துறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் பெரிய அளவில் உயிர் பலி தடுக்கப்பட்டது.

தமிழக அரசின் செயலை மு.க.ஸ்டாலின், ராமதாஸ், கமல் உள்ளிட்டோர் பாராட்டிய நிலையில் தமிழக அரசை, அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துவரும் டிடிவி தினகரனும் பாராட்டியுள்ளார்.

இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

“தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுத்துள்ளார்கள், நன்றாக எடுத்துள்ளார்கள். முன்னெச்சரிக்கை எடுத்து புயல் பாதிப்பில் மக்கள் உயிர் பலியை தடுத்துள்ளதை பாராட்ட வேண்டும்.

அதே நேரம் தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப முயற்சிக்க வேண்டும். ஏறத்தாழ 90 ஆயிரம்பேர் வரை அங்குள்ள மக்கள் அகதிகள் போல் உள்ளனர். நிறைய மரங்கள் விழுந்துள்ளது. வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடிந்துள்ளது. படகுகள் காணாமல் போயுள்ளது. மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், ஏழை எளியமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறிப்பாக வேதாரண்யம், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை ,பட்டுக்கோட்டை, பேராவூரணி, திண்டுக்கல் வரையிலும் பாதிப்பு இருப்பதாக சொல்கிறார்கள். புதுக்கோட்டை நகரத்தில் பெரிய பாதிப்பு, கடலூர் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கெடுத்து மத்திய அரசிடம் கூறி பேரிடராக அறிவித்து இழப்பீட்டை பெற வேண்டும்.

இவர்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பவர்கள்தானே. நிதியைப்பெற்று டெல்டா பகுதி மக்களுக்கு, ராமநாதபுரம் மற்ற மாவட்ட மக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதன் மூலம் அவர்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற முயற்சிக்க வேண்டும்.

புயல் வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிரிகளாக இருந்தாலும் நல்லதை பாராட்ட வேண்டும். ஆனாலும் இத்தோடு விடாமல் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் வாழ்வாதாரத்தை திரும்பபெற, உதவ மத்திய அரசிடமிருந்து உதவியை கேட்டுப்பெற வேண்டும்.

மத்திய அரசுடன் இவர்கள் இணக்கமாகத்தானே இருக்கிறார்கள், பிராஞ்ச் ஆஃபீஸ்தானே இது. நாம அடிமைகள் என்கிறோம், அவர்கள் சுமூகமான உறவு என்கிறார்கள் ஆகவே அந்த சுமூகமான உறவைப்பயன்படுத்தி மக்களுடைய வாழ்வாதாரத்தை மீட்க உதவவேண்டும்.”

இவ்வாறு டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x