Published : 22 Nov 2018 03:13 PM
Last Updated : 22 Nov 2018 03:13 PM

இன்று இரு விவசாயிகள் தற்கொலை; அரசியல் செய்ய இது நேரமில்லை: ஸ்டாலின் பேட்டி

'கஜா' புயல் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்திருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 லாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

"'கஜா' புயல் நிவாரண நிதியாக திமுக 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. நிவாரணப் பொருட்களும் வழங்குகிறோம்.  அதிமுக செய்யவில்லை. ஆனால், திமுக இதை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது என முதல்வர் பழனிசாமி தவறான செய்தியைச் சொல்கிறார். இதில் திமுக எந்தவிதமான அரசியலையும் பார்க்கவில்லை.

முதல்வர் பிரதமர் மோடியைச் சந்தித்து நிதி கோரியுள்ளார். அதை மத்திய அரசு உடனடியாக வழங்கிவிட வேண்டும்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

மத்திய குழு ஆய்வு செய்து தகவல்கள் சமர்ப்பிக்கட்டும், அதன் பிறகு நிதி கொடுப்பது பற்றி கூறுகிறோம் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறதே?

கஜா புயல் பேரிழப்பு ஏற்பட்டவுடன் மத்திய அரசு உடனடியாக முன் பணம் வழங்கியிருக்க வேண்டும். அப்படி வழங்கவில்லை. மாநில அரசு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்து, அதன் பின்பு தான் உதவி வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. போர்க்கால அடிப்படையில் நிச்சயமாக முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும்.

தானே புயல், வர்தா புயல், ஒக்கி புயல்களுக்கெல்லாம் மொத்தமாக சேர்த்து மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதி ஒரு லட்சத்து 2,573 கோடி ரூபாய். ஆனால், மத்திய அரசு வழங்கியது 2,012 கோடி ரூபாய் தான். இப்போது கேட்கப்பட்டிருக்கும் ரூ.15,000 கோடியை நிச்சயமாக வழங்குவார்களா என்பது கேள்விக்குறி.

திமுக ஆட்சிக் காலத்திலும் இதே நிலைதான் இருந்தது, அவர்கள் கேட்டது அனைத்தையும் வாங்கித் தரவில்லை, என்ற கருத்துக்கு உங்களின் பதில்?

திமுக ஆட்சி கடந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அதே பல்லவி தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். திமுகவாலும் வாங்க முடியவில்லை, நாங்கள் சென்ற போதும் வாங்க முடியவில்லை என்று முதல்வர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா?

வான் வழியாகப் பார்த்தால் மட்டும் தான் மக்களின் துயரத்தை உணர்ந்துகொள்ள முடியும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதுபற்றி உங்களின் கருத்து?

ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததாக அவரே ஒப்புக்கொள்கிறார். எனவே, ஐந்து நாட்களாக அமைச்சர்கள் தான் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இங்கு தான் இருக்கிறார்கள். அவர்கள் ஆய்வு எதுவும் செய்யவில்லையா? முதல்வர் திடீரென்று ஹெலிகாப்டர் எடுத்து சுற்றிப்பார்த்து விட்டு ஐந்து மணி நேரத்தில் ஆய்வு  நடத்தி முடித்துவிட்டு சென்று சொல்லியிருக்கிறாரா? இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, நம்ப முடியவில்லை.

திமுக காலத்தில் புயல் வந்த போது 2 லட்சம் தான் கொடுத்தார்கள், நாங்கள் 10 லட்சம் கொடுத்திருக்கிறோம், ஆனாலும் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று முதல்வர் கூறியுள்ளாரே?

அது நடந்தது பத்து வருடத்திற்கு முன்பு, அப்போதிருந்த விலைவாசி பொருளாதார சூழ்நிலை வேறு, இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலை வேறு. அதை புரிந்துகொள்ள வேண்டும்.

கஜா புயலைப் பொறுத்த வரையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், இது மக்கள் பிரச்சினை என்று கூறுகின்றனரே?

திமுக தயாராக உள்ளது. முதல்வர் டெல்லி செல்வதற்கு முன்பு விவசாயிகளை, மீனவர்களை பொது நலச்சங்கங்களை அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து பாதிப்புகள் குறித்து கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும்.

ஸ்டாலின் மக்களைத் தூண்டிவிட்டு, எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்று தம்பிதுரை சொல்லியிருப்பது பற்றி உங்களின் கருத்து?

அரசியல் ரீதியாக பேசுவதற்கு பதில் சொல்லவும், இதில் அரசியல் செய்வதற்கும் iது நேரமில்லை. அதை நான் விரும்பவில்லை.

புயலுக்கு பிறகும் மக்களின் துயரம் நீடித்துக் கொண்டே இருக்கிறதே?

வாழை விவசாயி தென்னை விவசாயி என இரு விவசாயிகள் இன்று கூட தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். உடனே, தற்கொலைகளைத் தடுத்தாக வேண்டும்!

ஏற்கெனவே இதே ஆட்சியிலே விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்கள். அது தற்கொலை இல்லை நோய் வந்து இறந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், இப்போதும் அது தான் சொல்லுவார்கள். இதைத்தான் எதிர்பார்க்கிறது அந்த ஆட்சி.

அதிமுக - பாஜகவோடு இணக்கமாகச் செயல்படுகிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். ஆனால் நிதி கொடுப்பதில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?

இணக்கமாகச் செயல்படுகிறது என்றால், செய்து கொண்டிருக்கிற ஊழலுக்கு, மத்திய அரசு துணை நிற்கிறது. அதற்காக இவர்கள் இணக்கமாக செயல்படுகிறார்கள். அதுதான் விஷயம், இணக்கமாகச் செயல்படுவது என்பது என்னவென்றால், கேட்ட நிதியை போராடி – வாதாடி வாங்கி வரவேண்டும். அதுதான் இணக்கமாகச்ச் செயல்படுவது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x