Published : 20 Nov 2018 08:36 AM
Last Updated : 20 Nov 2018 08:36 AM

தலைஞாயிறில் 4 நாட்களாக மக்கள் அவதி: ஒரு பகுதியில்கூட மீட்புப் பணி நடைபெறவில்லை எனப் புகார்

தலைஞாயிறு ஒன்றியத்தில் ஒரு பகுதியில் கூட மீட்புப் பணிகள் தொடங்கப்படாததால், உடனடியாக பணிகளைத் தொடங்கி எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்து கிடக்கும் பசுமாடு அகற்றப்படாத நிலையில் துர்நாற்றம் வீசும் ஆற்று நீரில் துணிகளைத் துவைக்கும் அவல நிலை உள்ளது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக ஏராளமான மரங்கள், தென்னை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளின் மேற்கூரைகளும், ஓட்டு வீடுகளில் ஓடுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. தலைஞாயிறு கடைத்தெருவில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் ஒரு தென்னை மரம் கூட புயல் காற்றுக்கு தப்பவில்லை. தென்னை மரங்களின் தலைப்பகுதி மட்டும் முறிந்து விழுந்துள்ளன.

அரிச்சந்திரா நதியில் புயலின்போது தவறி விழுந்து இறந்த ஒரு பசு மாட்டின் சடலம் 4 நாட்கள் ஆகியும் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த ஆற்றிலேயே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் துணிகளைத் துவைக்கின்றனர். குடிக்கவே தண்ணீர் கிடைக்காத நிலையில் துணிகளை வேறு எங்கே போய் துவைப்பது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தலைஞாயிறு பேரூராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தனித் தனியாக 150 பேர் வீதம் பொதுமக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். ஒவ்வொரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டுள்ள 150 பேருக்கும் 3 வேளை உணவுக்கு ஒரு மூட்டை அரிசியும், ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதை வைத்துதான் அவர்கள் 3 வேளையும் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

செலவுத்தொகை போதாது

இதுகுறித்து ஒரு திருமண மண்டபத்தில் உணவு பொறுப்பாளராக இருக்கும் மூர்த்தி என்பவர் கூறியபோது, "3 வேளையும் சமைக்க விறகு, பருப்பு, மிளகாய் தூள், மஞ்சள் பொடி உட்பட அனைத்து மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய், பால், காபி பவுடர் வாங்க வேண்டும். டிபன் என்றால் மாவு அரைக்க வேண்டும். அதற்கு தனியாக அரவை கூலி இருக்கிறது. இத்தனையையும் ஆயிரம் ரூபாய்க்குள் வாங்க முடியவில்லை. எனவே ரூ.1,500 கேட்டிருக்கிறோம். பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்

தலைஞாயிறு பகுதியில் பின்பட்ட சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன. இத்தனை சேதங்கள் ஏற்பட்டிருந்தும் மீட்புப் பணி ஒரு பகுதியில் கூட நடக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. வீடுகளின் ஓடுகள் அனைத்தும் காற்றால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வெட்டவெளி போன்ற வீட்டில்தான் பொதுமக்கள் வசிக்கின்றனர்.

தற்போது, மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் மழை தொடங்கினால் எங்களின் வாழ்வாதாரம் மேலும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலைஞாயிறு பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தலைஞாயிறை சேர்ந்த கார்த்திகேயன் கூறிய போது, "அரிச்சந்திரா நதியில் 4 நாட்களாக பசு மாடு இறந்து கிடப்பது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கிளை நூலகத்தின் மீது மரம் விழுந்து கிடக்கிறது. அதுவும் அகற்றப்படவில்லை. தலைஞாயிறில் மீட்பு பணி என்பது ஒரு சதவீதம் கூட நடக்கவில்லை" என்றார்.

பாவப்பட்டவர்களாகி விட்டோம்

இதுகுறித்து விவசாயியும், சமூக ஆர்வலருமான சோமு.இளங்கோ கூறியபோது, "தலைஞாயிறு ஒன்றியம் பாவப்பட்ட பகுதியாகி விட்டது. அரசு அதிகாரிகள் யாரும் எங்கள் பகுதியை எட்டிப்பார்க்கவில்லை. பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் சாப்பாடு போடுகிறார்கள். தண்ணீர் கொடுக்கிறார்கள். இது மட்டும் போதுமா, மீட்புப் பணி முடிந்து பொதுமக்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல வேண்டாமா?

பாதிப்புகள், இழப்புகள் குறித்த மதிப்பீடு முடிந்து விட்டதா என்று தெரியவில்லை. எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதாக தகவல் இல்லை. 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-16ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீடு தொகையே இன்னமும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காமல் உள்ள நிலையில் கஜா புயலால் விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.அரிச்சந்திரா நதியில் புயலின்போது தவறி விழுந்து இறந்த ஒரு பசு மாட்டின் சடலம் 4 நாட்கள் ஆகியும் அகற்றப்படாததால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. அந்த ஆற்றிலேயே அப்பகுதியை சேர்ந்த பெண்கள் துணிகளைத் துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x