Published : 22 Nov 2018 02:29 PM
Last Updated : 22 Nov 2018 02:29 PM

கஜா புயல்: மக்களின் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன; வேல்முருகன் வேதனை

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களின் அழுகுரல்கள், கூக்குரல்கள் ஒரு வார காலமாக கேட்டுக்கொண்டே இருக்கின்றன என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 15 மற்றும் 16 தேதிகளில் வேதாரண்யம்-நாகை இடையே கரையைக் கடந்த கஜா புயல் தமிழ்நாட்டின் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைத் தாக்கி உயிர், உடைமைப் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மனித உயிர்கள் 63 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆயிரக்கணக்கில் ஆடு, மாடுகளும் லட்சம் கோழிகளும் இறந்துவிட்டன. இவற்றைப் புதைப்பதற்கு வழியில்லாமல் கிடந்து துர்நாற்றம் வீசுகிறது. அதனால் தொற்றுநோய் பரவி மக்கள் மருத்துவமனைக்குப் படையெடுக்கின்றனர். அங்கோ போதிய மருத்துவர்கள் இல்லை. மருந்துகளும் இல்லை.

ஏறத்தாழ பல லட்சம் மரங்கள், 1 லட்சம் மின்கம்பங்கள், 1,000 மின்மாற்றிகள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து தடைபட்டது. மின்சாரம் இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கின.

பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், வாழை, தென்னை மற்றும் இதர பயிர்வகைகள் அழிந்துவிட்டன. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் என சுமார் 2 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

புயல் பாதித்த பகுதிகள் எங்கும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு. உணவுக்கும் வழியில்லை; பாலும் கிடைக்கவில்லை; அதனால் பால் லிட்டர் 100 ரூபாய் வரை சொல்லப்படும் நிலை. செல்போன் ரீசார்ஜ் செய்ய கட்டணம் மட்டுமே 400, 500 ரூபாய்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தொடங்கி செம்பியன்மாதேவிபட்டினம் வரை 34 மீனவ கிராமங்கள் மற்றும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏறத்தாழ 30,000 பேர் கடல் தொழில் செய்பவர்கள். இவர்களின் நாட்டுப் படகுகள், விசைப் படகுகள், வலைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. ஒரு படகு 2 லட்சம் ரூபாய், இன்ஜின் 50,000 ரூபாய், வலை 50,000 ரூபாய். வீடுகள் சேதம் வேறு. சொற்பத் தொகையே இழப்பீடாக அறிவிக்கப்பட்டதால், பணம் வேண்டாம் படகு தாருங்கள் என்பது மீனவ மக்களின் கோரிக்கை.

இன்னும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்; அதற்கு நேரமும் காலமும் போதவில்லை. இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டும் அரசு அலுவலர்களோ அமைச்சர்களோ முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்னும் செல்லவில்லை. மேலோட்டமாகப் பாதித்த பகுதிகளையே அமைச்சர்கள் பார்வையிட்டனர். முதல்வரும்கூட வானிலை மோசமாக இருக்கிறதென்று உள் பகுதிகளுக்குச் செல்லாமல் திரும்பிவிட்டார்.

உடனடியாக 1000 கோடி ரூபாய் நிவாரணத்திற்கென்று அரசு விடுவிப்பதாக அறிவிப்பு வெளியானது. நிவாரண நிதி கோரி முதல்வர் இன்று டெல்லி சென்று நிவாரண நிதிக்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனாலும் புயல் பாதித்த பகுதிகளிலிருந்து மக்களின் அழுகுரல்கள், கூக்குரல்கள் ஒரு வார காலமாக கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. இதிலிருந்து தெரியவரும் செய்தி, கஜா புயல் நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்பதுதான்.

எனவே, ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும்; நிவாரணப் பணிகளை கவனிக்க அனைத்துக் கட்சிக் குழு அமைக்க வேண்டும்; போர்க்கால அடிப்படையில் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x