Published : 13 Nov 2018 02:53 PM
Last Updated : 13 Nov 2018 02:53 PM

பட்டாசு ஆலைகள் மூடல்: மக்கள் நலனை காப்பதில் தோற்றுப்போன தமிழக அரசால் யாருக்கு என்ன பயன்? - தினகரன் கண்டனம்

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், உச்ச நீதிமன்றம் விதித்த கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய செய்தி.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரம் முடங்கியே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை எனக் கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது என்று பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான டான்பாமா தெரிவித்து உள்ளது.

நமது சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இருப்பினும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை உரிய முறையில் அணுகி இருக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழகம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், மாநில நலன் கருதி உரிய வாதங்களை அதிமுக அரசு முன்னெடுக்காததால் பெரும் பாதிப்பை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது.  மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதில் தமிழக அரசுக்கு இருக்கும் அதீத அக்கறை, மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் இல்லாதது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.

தற்போது கூட சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளித்தாலே, இத்தொழில் காப்பாற்றப்படும் என்ற நிலை இருக்கின்றபொழுது, டெல்லியிடம் இணக்கமாக இருக்கும் தமிழக அரசு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முயன்றிருக்கலாம்.

மக்களை தொடர்ந்து போராட்ட மனநிலையிலேயே வைத்திருக்கும் எந்த அரசும் மக்கள் விரோத அரசுதான். மக்கள் நலனை காப்பதில் தோற்றுப்போன இந்த அரசு இருந்து யாருக்கு என்ன பயன்?

 தமிழக கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x