Published : 15 Nov 2018 09:29 AM
Last Updated : 15 Nov 2018 09:29 AM

ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த 7 பேர்; புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: நீதிபதி மலர்விழி தலைமையில் நடந்தது

ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை யடித்த வழக்கில் கைதாகியுள்ள 7 கொள்ளையர்களுக்கு புழல் சிறையில் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன், தினேஷ், ரோகன்பார்தி ஆகிய 7 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இதில் தினேஷ், ரோஹன் பார்த்தி தவிர ஏனைய 5 பேரை 14 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்தது. கொள்ளை எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதை நடிக்க வைத்து, போலீஸார் வீடியோ பதிவு செய்துகொண்டனர்.

கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம், நடித்துக்காட்டிய வீடியோ காட்சி மேலும் சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். வழக்குக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கொள்ளைச் சம்பவம் நடந்த அன்றும் கொள்ளைக்கு ஒத்திகை பார்த்த சமயத்திலும் சின்னசேலம், விருதாசலம், அயோத்தியா பட்டிணம் மற்றும் சில இடங்களில் கொள்ளையர்களை நேரில் பார்த்த சில சாட்சிகள் சிபிசிஐடி போலீஸாரிடம் உள்ளனர்.

தற்போது கைது செய்யப் பட்டிருக்கும் மோஹர்சிங் உட்பட 7 பேரையும்தான் நேரில் பார்த்தோம் என்பதை உறுதி செய்வதற்காக புழல் சிறையில் நேற்று நீதிபதி மலர்விழி தலைமையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதில் கொள்ளையர்களை நேரில் பார்த்தவர்கள் அவர்களை சரியாக அடையாளம் காட்டினர். இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இருப்ப தாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x