Published : 02 Nov 2018 08:57 AM
Last Updated : 02 Nov 2018 08:57 AM

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: தமிழகம் முழுவதும் ரூ.44.30 லட்சம் பறிமுதல்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம், விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்றவற்றில்  முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையிலான போலீஸார் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அலுவலக தொலைபேசி இணைப்பை துண்டித்தனர்.

இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வாகனங்கள், சாப்பாட்டு பைகள் மற்றும் அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அதில்,கணக்கில் வராத ரூ.8 லட்சம் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், வட்டார போக்குவரத்து அதிகாரி அறிவழகன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் பணம் மற்றும்ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வேலூர் ஆவினில் 11 பணியாளர்களுக்கு ரூ.44 லட்சம் அளவுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இந்தத் தொகையை வழங்குவதற்காக தலா 35 சதவீதம் லஞ்சப் பணத்தை பொது மேலாளர் (பொறுப்பு) முரளி பிரசாத் பெறுவதாக வந்த தகவலின்பேரில், அங்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூ.14.8 லட்சம் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. 

திருச்சி மாவட்டம் ரங்கம் மற்றும் தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ளவட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத தொகை என திருச்சியில் ரூ.44,500, கரூரில் ரூ.33 ஆயிரம், புதுக்கோட்டையில் ரூ.56 ஆயிரம் பிடிபட்டது.

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் ஆளறிச் சான்றிதழ் பெறுவதற்காக நேற்று பழநி கோயிலுக்குச் சொந்தமான தண்டாயுதபாணி நிலையத்தில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

இதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் 5 போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.88 ஆயிரம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று கோவில்பட்டி, ஓசூர், கடலூர் ஆர்டிஓ அலுவலகங்களில் முறையே ரூ.1.54 லட்சம், ரூ.1.32 லட்சம், ரூ.3.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள பொதுப்பணித்துறை, டாஸ்மாக், நகராட்சி அலுவலகங்களிலும் கணக்கில் வராத  லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரியும், ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்த  பாபுவிடம் (51) விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிலையில்இருந்த பாபு வாந்தி எடுத்து,  மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அவருக்கு மாரடைப்புஏற்பட்டது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x