Published : 18 Nov 2018 10:23 AM
Last Updated : 18 Nov 2018 10:23 AM

4 மாவட்டங்களில் 30,000 மின்கம்பங்கள் சேதம்- அமைச்சர் தங்கமணி தகவல்

கஜா புயலில் 4 மாவட்டங்களில் 30 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மின்கம்பங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதால், மின் விநியோகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளுக்கு முதற்கட்டமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 8.40 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், 2.58 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள புதுகை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் 12,371 மின்வாரிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

திருச்சி மாவட்டத்தில் ஆயிரம் மின்கம்பங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன என்றார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில்

கஜா புயல் பாதிப்புகள் தொடர்பாக தஞ்சாவூர் அரசினர் ஆய்வு மாளிகையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பிக்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.பரசுராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்னர், அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்டாவில் 5 மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக் கப்பட்டு, முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத கணக்கெடுப்புகளும் நடைபெற்று வருகிறது என்றார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு

கஜா புயல் பாதிப்புகள் குறித்து அக்கரைப்பேட்டை புதிய மீன் இறங்குதளம், துறைமுகம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x