Published : 09 Nov 2018 09:08 PM
Last Updated : 09 Nov 2018 09:08 PM

பாஜக அரசை அகற்ற அனைத்து மாநிலத் தலைவர்களும் இணைய உள்ளோம்: சந்திரபாபு நாயுடுவுடன் ஸ்டாலின் கூட்டாகப் பேட்டி

மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்ற அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடிப் பேச இருக்கிறோம் என சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் கூட்டாக ஸ்டாலின் அளித்த பேட்டி:

''ஏற்கெனவே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்ததை நான் வரவேற்றேன். மாநில உரிமைகள் மோடி ஆட்சியில் முழுமையாக பறிக்கப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் ஆளும் மோடி ஆட்சியை அகற்றப் பாடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

சிபிஐயாக இருந்தாலும் சரி, நீதிமன்றமாக இருந்தாலும் சரி, ஆர்பிஐயாக இருந்தாலும்சரி அத்தனையும் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்புகளாகும். ஆனால், அப்படிச் செயல்படுகின்ற அமைப்புகளை மிரட்டுகிற அச்சுறுத்துகிற நிலையில்தான் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

இதைத் தடுத்தாக வேண்டுமென்றால், உடனடியாக பாஜக ஆட்சியை அகற்ற இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும், முதல்வர்களும் செயல்பட வேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாடுபட்டு வருகிறார்.

அந்த அடிப்படையில் திமுகவின் ஆதரவு வேண்டும் என்று கேட்டுள்ளார், நாங்கள் மனப்பூர்வமாக ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளேன். வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் வகையில் விரைவில் டெல்லியிலோ, அல்லது வசதியான ஏதாவது ஒரு மாநிலத்தில் அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடி ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்த உள்ளோம்.

அதன்மூலம் படிப்படியாக என்னென்ன பணிகளில் எப்படிப்பட்ட நிலைகளில் நாம் ஈடுபடலாம் என்பது குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார். நானும் அந்தக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக தெரிவித்துள்ளேன்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

குறைந்தபட்ச செயல்திட்டம் எதுவும் பேசப்பட்டதா? என்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அதெல்லாம் படிப்படியாக அடுத்தடுத்த கூட்டங்களில் பேசப்படக்கூடிய ஒன்று. அது நிச்சயம் இருக்கும். ஏற்கெனவே திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தி குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆகவே குறைந்தபட்ச செயல்திட்டம் நிச்சயம் இருக்கும்'' என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x