Published : 27 Nov 2018 08:35 AM
Last Updated : 27 Nov 2018 08:35 AM

கஜா புயல் பாதித்த நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டனர்: மத்திய குழுவினரின் ஆய்வு பணிகள் நிறைவு

சேதத்தை சரிசெய்ய சில காலம் ஆகும் என தகவல் | தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் இன்று ஆலோசனை

நாகப்பட்டினம் மாவட்டம், காரைக் காலில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் நேற்று ஆய்வுப் பணிகளை நிறைவு செய்தனர். இன்று சென்னை திரும்பும் குழுவினர் முதல் வருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் கஜா புய லால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை இணை செய லாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமை யிலான மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன்படி, நேற்று நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பில் புயலால் பாதிக்கப்பட்ட துணை மின் நிலையத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கிருந்து விழுந்தமாவடிக்கு மத்திய குழு வினர் வந்தபோது, உள் பகுதி களுக்குச் செல்லவில்லை என்று கூறி அங்கிருந்த பொதுமக்கள், மத்திய குழுவினரின் வாகனங் களை மறித்தனர். அப்போது, பொது மக்களை உடனடியாக அப்புறப் படுத்திய போலீஸார், மத்திய குழுவினரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

பின்னர், அரசு அதிகாரிகளின் வாகனங்களை மறித்து அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான மதிவாணனின் காரையும் மறித்தனர். இத னால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்து புஷ்பவனம் மீனவ கிராமத்துக்கு வந்த மத்திய குழு வினர், புயலால் கடலில் இருந்து கரைப்பகுதிக்கு தள்ளப்பட்ட சேற் றைப் பார்வையிட்டனர். சேற்றில் சிக்கிய படகுகள், வலைகளின் நிலை குறித்து கேட்டறிந்த அவர்கள், பின்னர் கோவில்பத்து கிராமத் துக்குச் சென்றனர். அங்குள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய சேமிப்புக் கிடங்கில் உருக் குலைந்த 43 கட்டிடங்களை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, வேதாரண்யம் ஒன்றியம் பெரியகுத்தகை கிரா மத்தில் உள்ள முகாமுக்குச் சென்று குறைகளைக் கேட்டனர்.

அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர், பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீள வேண்டு மென்றால் உடனடியாக நிவா ரணத்தை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பின்னர் அதே கோரிக் கையை வலியுறுத்தி மத்தியக் குழுவினரின் காலில் விழுந்து கதறினார். போலீஸார் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி அங் கிருந்து அப்புறப்படுத்தினர். பின் னர், பெரியகுத்தகை பல் நோக்கு பேரிடர் மையக் கட்டிடத்தில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக உணவு சமைக்கும் பணியை பார்வையிட்டனர்.

அங்கு மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் கூறியதாவது:

நாகை மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதை சாலையின் இரு பக்கங்களிலும் ஏற்பட்டுள்ள சேதத் தைக் கொண்டே உணர முடி கிறது. சவுக்கு, பலா உட்பட தோட்டப்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்ததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. புஷ்பவனத்தில் படகு கள் சேற்றில் சிக்கி உள்ளன. பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக் கிறது. சேதத்தை சரிசெய்ய சிறிது காலம் பிடிக்கும். அனைத்தையும் மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும். தமிழக அரசு, முடிந்த வரை சிறப்பாக பணி யாற்றி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சேதவிவரங் களைப் பார்வையிட்டதும் உடனடி யாக மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது அமைச் சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதய குமார் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குநர் பி.என்.தர், மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.

காரைக்காலில் ஆய்வு

பின்னர், காரைக்கால் சென்ற மத்தியக் குழு புயலால் பாதிக்கப் பட்ட நடுக்களம்பேட், வடகட்டளை, பட்டினச்சேரி, காக்காமொழி, திரு நள்ளாறு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டது. பட்டினச்சேரி கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டு சேதம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மீனவப் பெண்கள் பலர், இது வரை நிவாரணம் எதுவும் கிடைக்க வில்லை என குழுவினரிடம் முறையிட்டனர். பின்னர் காக்கா மொழி கிராமத்தில் விழுந்த தென்னை மரங்கள், திருநள்ளாறில் சேதமடைந்த பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றையும் பார்வை யிட்டனர்.

முன்னதாக, புதுச்சேரி மாநில அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. அப்போது, புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மத்திய குழுவினர் இன்று (நவ.27) புதுச்சேரியில் முதல்வர் வி.நாராயணசாமியுடன் ஆலோ சனை மேற்கொள்கின்றனர்.

சென்னையில் ஆலோசனை

புயல் பாதித்த பகுதிகளில் நேற்றுடன் ஆய்வை நிறைவு செய்துவிட்டு புதுச்சேரியில் தங்கிய மத்திய குழுவினர் இன்று சென்னை திரும்புகின்றனர். சென்னையில் முதல்வர் கே.பழனிசாமி அல்லது தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின், டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். அடுத்த சில தினங்களில் அவர்கள் அறிக்கை தயாரித்து, மத்திய உள்துறையிடம் அளிக்க உள்ளனர். அதன்பிறகு, மத்திய அரசு நிவாரணத் தொகையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x