Last Updated : 10 Nov, 2018 07:41 PM

 

Published : 10 Nov 2018 07:41 PM
Last Updated : 10 Nov 2018 07:41 PM

பார்வையற்ற நிலையிலும் ரத்ததானம் செய்யும் இளைஞர்: தன்னலமற்ற சேவைக்கு ஆட்சியர் பாராட்டு

‘‘கண்பார்வை இல்லாதபோதும் இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே ரத்ததானம் செய்கிறேன்" என்கிறார் எஸ்.தங்கராஜ் (38).

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்த இவர், வறுமை காரணமாக சிறுவயதில் ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். 18 வயதில் கண்பார்வை பறிபோனது. மருத்துவர்கள் கைவிரித்தனர்.

சோதனைகள் தொடர்ந்தன. அடுத்தடுத்து தாய், தந்தையை இழந் தார். சகோதரரும், சகோதரியும் திருணம் முடித்து சென்றுவிட்டனர். தன்னந்தனியாக இருந்தவருக்கு அந்த கிராமத்து இளைஞர்கள் உறுதுணைபுரிந்தனர்.

25 முறை ரத்ததானம்

கடந்த 2000-ம் ஆண்டில் இக்கிராமத்தில் ராஜேஷ் (7) என்ற சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக அதிகளவில் ரத்தம் தேவைப்பட்டது.

பலர் ரத்ததானம் செய்தனர். இச்சம்பவத்துக்குப் பின், அப்பகுதி தையல் தொழிலாளி எஸ்.வைத்திலிங்கம் முயற்சியால், `நண்பர்கள் ரத்ததான குழு’ உருவாக்கப்பட்டது. கூலித்தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், காற்றாலை தொழிலாளர்கள் என 60 பேர் இதில் உறுப்பினர்கள்.

ஆட்சியர் பாராட்டு

இக்குழுவில் தங்கராஜும் ஒருவர். ஏ-1-பி பாசிட்டிவ் என்ற அபூர்வ ரத்தவகையைக் கொண்ட இவர், கடந்த 2017-ம் ஆண்டில் தொடர்ந்து 3 முறையும், இதுவரை 25 முறையும் ரத்ததானம் வழங்கியுள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி திருநெல்வேலியில் சமீபத்தில் நடைபெற்ற உலக ரத்த கொடையாளர் தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். இதே விழாவில் நண்பர்கள் ரத்ததான குழுவின் தலைவர் வைத்திலிங்கத்துக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டில் தொடர்ந்து 4 முறையும், தொடர்ச்சியாக 40 முறையும் ரத்த தானம் வழங்கியுள்ளார். இக்குழுவினர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ரத்ததான முகாமை நடத்தி ரத்தம் வழங்கி வருகிறார்கள்.

மெய்சிலிர்க்க வைக்கிறது

வைத்திலிங்கம் கூறும்போது, ‘‘பார்வையற்ற நிலையிலும் தங்கராஜின் சேவை எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகைதான் முக்கிய ஆதாரம். அதுதவிர மற்றவர்களின் உதவியுடன்தான் வாழ்க்கையை நடத்துகிறார்.

கடந்த ஆண்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்பெண் பீடி சுற்றுகிறார். இந்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தினாலும், ரத்ததானம் செய்வதற்கு தங்கராஜ் தயங்குவதில்லை’’ என்றார்.

‘‘பார்வை இழந்ததால் சும்மாவே இருக்கிறேன். எனது ரத்தமாவது யாருக்காவது உதவட்டும் என்றுதான் நண்பர்களின் உதவியுடன் ரத்ததானம் செய்கிறேன்” என்கிறார் தங்கராஜ். இவரது சேவையைப் பாராட்டி தனியார் அமைப்புகள் பலவும் இவரை கவுரவித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x