Published : 26 Nov 2018 09:12 AM
Last Updated : 26 Nov 2018 09:12 AM

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வது, அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகைசெய்யும் அரசாணை 56-ஐ ரத்துசெய்வது என்பன உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 30-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அதைத்தொடர்ந்து டிசம்பர் 4 முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் படும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

இந்நிலையில், தொடர் போராட்டத்துக்கான ஆயத்த மாநாடு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது. சென்னை மாவட்ட ஆயத்த மாநாடு கீழ்ப்பாக்கம் கேரள சமாஜம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, எஸ்.சங்கரப்பெருமாள், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் டேனியல் தனுசிங், கே.சாந்தகுமார், கே.சத்யநாதன், ஜோசப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

4 மாவட்டங்களில் தள்ளிவைப்பு

ஆயத்த மாநாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரப்பெருமாள், "எங்களின் கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாக போராடி வருகிறோம். ஆனால், தமிழக அரசு எங்கள் போராட்டத்தை கண்டுகொள்வதாக தெரியவில்லை. நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, வரும் 30-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும், டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும். ‘கஜா’ புயல் பாதித்த தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் போராட்டம் தள்ளி வைக்கப் படுகிறது. அம்மாவட்டங்களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நிவா ரணப் பணிகளில் ஈடுபடுவர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x