Published : 24 Oct 2018 04:01 PM
Last Updated : 24 Oct 2018 04:01 PM

‘வடகிழக்குப் பருவமழை தொடங்குவது தாமதமாகும்’: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வடகிழக்குப் பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பில்லை இன்னும் சில நாட்கள் தாமதமாகி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. கடந்த 4 மாதங்களாக நீடித்த தென்மேற்குப் பருவமழை கடந்த 21-ம் தேதியுடன் முற்றிலுமாக விலகிவிட்டது என்று இந்திய வானிலை மையம் அறிவித்தது. மேலும், 26-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.

வழக்கமாக அக்டோபர் 15 முதல் 20-ம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழை இயல்பான நிலையில் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், அரபிக்கடலில் உருவான ‘லூபன்’ புயல், வங்கக்கடலில் உருவான ‘டிட்லி’ புயல் ஆகியவை காரணமாக, காற்று வீசும் திசைகள் மாறி, வடகிழக்குப் பருவமழை தொடங்குவது தள்ளிப்போனது. இந்நிலையில், மேலும் வடகிழக்குப் பருவமழை தள்ளிப்போகும், 26-ம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:

''வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்ததுபோன்று இம்மாதம் 26-ம் தேதி தொடங்குவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கின்றன. வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால், சில நாட்கள் தாமதமாக நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

நவம்பர் முதல் வாரத்தில் இருந்து மேற்கில் இருந்து வரும் காற்றை நம்முடைய கடற்பகுதிக்குச் சாதகமாக இருக்கிறது. ஆதலால், இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த காலகட்டத்தில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திலும் கூட மழை பெய்யக்கூடும்.

அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் அதைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையை காணப்படும்.

அதேசமயம், நவம்பர் முதல் வாரத்தில் எம்ஜேஓ (The Madden–Julian oscillation (MJO) எனப்படும், காற்று, மேகக்கூட்டம், மற்றும் அழுத்தத்தைக் கொண்டுவரும் சூழல் சாதகமாக இருப்பதால் வடகிழக்குப் பருவமழை சிறப்பாக இருக்கும்''.

இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x