Published : 11 Oct 2018 10:30 PM
Last Updated : 11 Oct 2018 10:30 PM

அவசரமாக போன் பேச வேண்டும்: இளைஞரிடம் செல்போனை வழிப்பறி செய்த இரு சிறுமிகள் கைது

வேப்பேரியில் இளைஞர் ஒருவரிடம் செல்போனை இரவல் கேட்பதுபோல் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் தானிஸ் (18). இவர் தற்போது நீட் தேர்வுக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். படிப்பதற்காக கடந்த 1 மாதத்திற்கு முன்பு சென்னை வந்த இவர் பெரியமேடு, R.M சாலையில் தங்கியிருந்தார். நேற்று இரவு 10 மணியளவில் உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை வாங்க வேப்பேரி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரருகில் வேகமாக ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றுள்ளது. அதில் 17 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் டிப்டாப்பாக உடையணிந்து பெரிய இடத்துப் பெண்கள் போன்ற தோற்றத்துடன் இருந்தனர்.

அவர்களைப் பார்த்து தானிஸ் ஒதுங்கி நடக்க எக்ஸ்கியூஸ்மி சார், என்று அந்தப் பெண்கள் தயங்கியபடி அழைத்தனர். என்ன மேடம் என தானிஸ் கேட்டுள்ளார். இங்கே ஒரு நண்பரைச் சந்திக்க வந்தோம். செல்போனை எடுத்து வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. கொஞ்சம் போன் கொடுத்தால் பேசிவிட்டு தருகிறேன் ப்ளீஸ் என ஒரு பெண் கூற, நம்பிக்கையுடன் தானிஸ் தனது ஆண்ட்ராய்டு செல்போனைக் கொடுத்துள்ளார்.

அவ்வளவுதான். வாங்கிய மறுகணம் இருசக்கர வாகனம் வேகமெடுக்க அப்போதுதான் தன்னிடம் கேட்டது உதவியல்ல, தனக்கு நேர்ந்தது வழிப்பறி எனப் புரிந்துகொண்ட தானிஸ் கூச்சலிட்டார்.

இரண்டு பெண்கள் செல்போனைப் பறித்துக்கொண்டு வாகனத்தில் செல்வதைப் பார்த்த அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அப்பெண்களை விரட்டினர். பின்னர் நீண்ட விரட்டலுக்குப் பின் ஸ்டிரிங்கர்ஸ் சாலையில் பொதுமக்கள் பிடித்தனர்.

பின்னர் அவர்களை பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்க போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெயர் ராதா (17), விஜயா (17) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும் வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

ஆண்கள் மட்டுமே செய்த வழிப்பறியை முதன்முறையாக பெண்கள், அதுவும் சிறுமிகள் செய்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்தப் பெண்களின் பெற்றோரை வரவழைத்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x