Published : 25 Oct 2018 11:18 AM
Last Updated : 25 Oct 2018 11:18 AM

தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை; 18 தொகுதிகளிலும் ஜெயிப்போம்: டிடிவி தினகரன் நம்பிக்கை

18 எம்எல்ஏக்களுடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என 3-வது நீதிபதி சத்திய நாராயணன் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளார். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை எனவும் 3-வது நீதிபதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க இருந்த தடை நீக்கப்படுவதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “இந்த தீர்ப்பால் எங்களுக்குப் பின்னடைவு இல்லை. இது எங்களுக்கு ஒரு அனுபவம். இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என நினைத்தோம். ஆனால் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்திருக்கிறது. எங்கள் தரப்பு 18 எம்எல்ஏக்களிடம் கலந்தாலோசித்து அவர்கள் எடுக்கும் முடிவின் படி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியபோது, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என தங்க தமிழ்செல்வன் மட்டும் தான் சொன்னார். இப்போது மற்ற 17 பேரும் மேல்முறையீடு செய்யலாம் என முடிவெடுத்தால் அதனை செய்வோம். இல்லையென்றால் அந்தந்த தொகுதிகளில் தேர்தலை சந்திப்போம்.

இன்று மாலை அநேகமாக நான் குற்றாலம் கிளம்பி செல்வேன். இந்த தீர்ப்பால் 18 எம்எல்ஏக்களிடையே இன்னும் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்கள் என் அனுமதியுடன் தான் நெல்லை புஷ்கர விழாவுக்கு சென்றனர். நான் தான் எல்லோரையும் அங்கு இருக்க சொன்னேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அங்கே முடிவெடுப்போம். அவர்களின் முடிவை நான் செயல்படுத்துவேன்” என தினகரன் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு துரோகிகளுக்கு சரியான பாடம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “துரோகி யார் என மக்களுக்கு தெரியும். சட்ட ரீதியான தீர்ப்பை விட மக்கள் தீர்ப்பு தான் முக்கியம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்தால் யார் துரோகி என தெரிந்துவிடும். அவர்கள் செய்தது பச்சைத்துரோகம் என மக்களுக்கு தெரியும். அதனால் தான் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறோம். இடைத்தேர்தலை மக்களும் அமமுகவும் எதிர்பார்க்கின்றோம். மொத்தமாக 20 தொகுதிகளில் தேர்தல் வந்தால் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தான் ஜெயிப்போம்” என கூறினார்.

இந்த தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிடிவி தினகரன், “எனக்கு தெரியவில்லை. அதற்கு பதில் கூற முடியாது” என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x